
ஈப்போ, டிச.4: பேராக் மாநிலத்திலுள்ள ஆலயங்கள் சட்ட சிக்கல்கள் வராமல் இருக்க, ஆலயங்களை அரசாங்க பதிவேட்டின் கீழ் ஆவணப்படுத்துங்கள்( கேசட்) என்று பேராக் இந்திய சமூக நலத்துறை, சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் அறிவுறுத்தினார்.
தற்போது தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய பெயர் மாற்றம் விவகாரம் முற்றுப்பெற்றது. முன்பு இரு ஆலய அறங்காவலர்கள் பெயர்களில் ஆலயம் இருந்துள்ளதாக அரசாங்க பதிவேடு( கேசட்) குறிக்கிறது. ஆனால், ஆலய நிர்வாகம் முறையாக தங்கள் மனுவை செய்து ஆலய பெயரில் அரசாங்க பதிவேட்டில் பதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
இத்தகைய நிலைப்பாடு ஈப்போ பேர் பார்க்( Fair Park) ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயமும் அரசாங்க பதிவேட்டில் இடம் பெற்றுவிட்டது. இத்தகைய பிரச்சினை நாடு முழுவதுமுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதனை தீர்வு காண சம்பந்தப்பட்ட மாநில இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆலய நிர்வாகங்களுக்கு உதவிட முன் வர வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

முந்தைய காலத்தில் புதிய ஆலயம் நிர்மாணிக்க நிலத்தை அடையாளம் கண்டு அந்த ஆலயத்தை இறுதியில் யார் பராமரிப்பது போன்ற செயல்நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியாளர் மேற்கொண்டு வந்தார். ஆனால், தற்போது பேராக் மாநிலத்தில் இனி மாவட்ட ஆட்சியாளருக்கு ஆலயத்தை பராமரிக்கும் தரப்பை தேர்வு செய்யும் தகுதிகள் கிடையாது. இவ்விவகாரத்தில் பாகான் டத்தோ சிம்பாங் அம்பாட் முருகன் ஆலயம் உருவான நிலைப்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார்.
பேராக்கில் இனிவரும் காலங்களில் மாநில அரசாங்கம் ஆலய பராமரிப்பு விவகாரத்தில் பொறுப்பேற்க்கூடாது. பதிவு செய்த ஆலய நிர்வாகம் இதன் பொறுப்பை ஏற்பார்கள். இவ்விவகாரத்தில் எல்லா ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முழு கவனம் செலுத்தி நமக்கு சாதகமாக தீர்வு காண முற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, பேராக்கில் இதுவரை பத்து தமிழ்ப்பள்ளிகள் முறையாக அரசாங்க பதிவேட்டின் கீழ் ஆவணப்படுத்தியாகி விட்டது. குறிப்பாக, கம்பார் தமிழ்ப்பள்ளியை அரசாங்க பதிவேட்டில் ஆவணப்படுத்த தவறிய போது ஒரு சில பொறுப்பற்ற தரப்பினர் அப்பள்ளியின் ஒரு பகுதி நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என்று எடுத்துக்கொண்டனர். ஈப்போ சத்தியசீலா தமிழ்ப்பள்ளியும் இத்தகைய நிலைப்பாட்டை எதிர்நோக்கியது. அதோடு, மஞ்சோங்கில் கொலம்பியா தமிழ்ப்பள்ளி நிலப்பிரிமியம் 1.4 மில்லியன் ரிங்கிட் பிரச்சினையும் சுமுகமாக தீர்வு காணப்பட்டதாக அவர் சொன்னார்.
இத்தகைய பிரச்சினைகளில் சுதந்திரத்திற்கு முன்பு இந்து இடுகாடுகளை பராமரிக்கும் சட்டவிதிகள் வேறுபட்டவையாகும். ஆனால், இன்று மாவட்ட நிலவள இலாகாவின் பார்வையின் கீழ் பதிவு பெற்ற இயக்கங்கள் இடுகாட்டை பராமரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டு கூறினார்.

