
பினாங்கு, ஆகஸ்ட் 6 –
பிகேஆர் கட்சியின் தேசிய பேராளார் மாநாடு அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா அன்வார் தற்காலிக விடுப்பு எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்ஸில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நூருல் இசா முழுமையாக பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்திருந்தாலும், கட்சியின் மத்திய தலைமைக் குழு அதனை ஏற்காமல், அவருக்கு தற்காலிக ஓய்வு வழங்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.
மேலும், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெறும் பிகேஆர் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவு தேசிய மாநாட்டை நூருல் இசா தொடக்கி வைப்பார் என்றும் அவர் கூறினார்.
நூருல் இசா விடுப்பில் இருக்கும் காலத்தில், பிகேஆர் துணைத் தலைவரின் பொறுப்புகளை கட்சியின் துணைத் தலைவர் சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் தற்காலிகமாக மேற்கொள்வார்.
அதேவேளை, கட்சியின் மற்றொரு துணைத் தலைவர் அமிருடின் ஷாரி, இதற்கு முன்பு சைஃபுடினுடன் இணைந்து மேற்கொண்டிருந்த பிகேஆர் தேர்தல் இயக்குநர் பொறுப்பை இனி முழுமையாக ஏற்கவுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலில், ரஃபிசி ரம்லியை தோற்கடித்து நூருல் இஸ்ஸா பிகேஆர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, ரஃபிசி ரம்லியும் முன்னாள் துணைத் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மதும் கட்சியிலிருந்து விலகி, “பெர்சாமா” என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கினர்.
அமிருடின் ஷாரி, நூருல் இசாவுக்கு பதிலாக தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து, அவருக்கு தற்காலிக விடுப்பு வழங்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

