
கோலாலம்பூர், ஆக 7-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக செராஸ் தோகையடி விநாயகர் ஆலயம் விளங்குகிறது.
93 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த ஆலயம் செராஸ் வட்டார மக்களுக்கு தாய்க் கோவிலாக அருள் பாலித்து கொண்டிருக்கிறது.
தற்போது இந்த ஆலயம் பல லட்சம் வெள்ளி செலவில் திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.
செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு டான் கோக் வாய் இன்று ஆலயத்திற்கு நேரடி வருகை தந்து திருப்பணி பணிகளை பார்வையிட்டார்.
முன்னதாக ஆலயத் தலைவர் எஸ்.டி. பாலா அவர்கள் டான் கோக் வாய் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை மாண்புமிகு டான் கோக் வாய் ஆலயத்திற்கு இரண்டு லட்சம் வெள்ளிக்கு மேல் மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார் என்று எஸ்.டி. பாலா தெரிவித்தார்.
திருப்பணி பணிகள் முடிந்ததும் அடுத்த ஆண்டு மத்தியில் மகா கும்பாபிஷேகம் மிகப்பெரிய அளவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
ஆலய திருப்பணிக்கு தொடர்ந்து உதவுவதாக டான் கோக் வாய் கூறியுள்ளார். இந்த தருணத்தில் அவருக்கும் மடானி அரசுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் சொன்னார்.

