மணிசேகரனின் மரணம் தொடர்பாக விசாரணையை நடத்துங்கள்! கோபிந்த் சிங் டியோவின் கோரிக்கை ஏற்று புக்கிட் அமானுக்கு சட்டத்துறை ஆணையம் உத்தரவு!

புத்ரா ஜெயா, டிச 6-
போலிஸ் தடுப்புக் காவலில் இறந்ததாக நம்பப்படும் இந்திய லாரி ஓட்டுனரின் மணிசேகரனின் மரணம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார்.

இதன் பயனாக விசாரணை அறிக்கையை துரிதப்படுத்துமாறு தேசிய சட்டத்துறை அலுவலகம், புக்கிட் அமான் தேசிய காவல் துறையை பணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரண விசாரணை அறிக்கை குறித்து, ஏஜிசியிடமிருந்து விளக்கம் கோரிய, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் கோரிக்கைக்கு பதிலளித்த தேசிய சட்டத்துறை ஆணையர், அந்த லாரி ஓட்டுனர், எம் மணிசேகரனின் மரண அறிக்கையை சீக்கிரம் சமர்ப்பிக்குமாறு புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு மற்றும் தடுப்புக்காவல் மரணப் பிரிவுக்கு ((USJKT) உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

“இறப்புக்கான காரணம் மற்றும் இறப்பு ஏற்பட்ட விதத்தை தீர்மானிக்க வழக்கை மரண விசாரணை நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க இது உதவும்.

தேசிய சட்டத்துறை ஆணையம், தடுப்புக் காவலின் போது நிகழும் ஒவ்வொரு உயிரிழப்பும் வெளிப்படையாகவும், முழுமையாகவும், சட்டத்தின்படி அணுகப்படுவதில் தொடர்ந்து உறுதியாக உள்ளது,” என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன், ஜ.செ.க கட்சியின் தேசிய தலைவரும், இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ, மணிசேகரன் காவல் தடுப்பில் உயிரிழந்தது குறித்து — ஒன்பது மாதங்கள் கடந்தும் — விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, தேசிய சட்டத்துறை ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு, மணிசேகரன், பெட்டாலிங் ஜெயா சன்வே காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பின், தடுப்புக் காவலின் போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தனது கணவரின் இறப்பில், சந்தேகம் இருப்பதாகவும், மணிசேகரனின் மார்பு பகுதியில் காயங்களோடு, பற்கள் உடைந்து, மற்றும் கண்களில் ரத்தம் கசிந்திருந்ததாக அவரது மனைவி ராஜேஸ்வரி சுப்பிரமணியம் புகார் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

ஆனால், அவரது உடற்கூறு ஆய்வில், மேற்கண்ட எதையும் குறிப்பிடாமல், மாரடைப்பு, தேமல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் நுரையீரலில் திரவம் என உடற்கூறு அறிக்கையில், முரண்பட்ட விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

9 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை துரித்தப்படுத்த வேண்டும் என்று கோபிந்த் சிங் டியோ க தேசிய சட்டத்துறை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles