
கோலாலம்பூர் டிச 9-
மலேசியாவில் காவல் துறையின் நடவடிக்கைகளில் தனி நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவது அதிகரித்து வருவது குறித்து மலேசிய இந்து சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொள்கிறது.
அண்மையில் நடந்த சில நிகழ்வுகள், உயிருக்கு ஆபத்தான ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு முன் போதுமான விசாரணை மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கும் காவல் துறையின் பங்கை மலேசிய இந்து சங்கம் முழுமையாக மதிக்கிறது.
ஆனாலும், ஒவ்வொரு உயிரும் மதிப்புமிக்கது என்பதையும், நீதித்துறை நடைமுறைகள் எப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
குற்றச்சாட்டில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு, முறையான விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். .
இது ஜனநாயக சமூகத்தின் அடிப்படை நெறிமுறையாகும்.
சுட்டுக்கொல்லப்படுபவர்களில் இந்து/இந்திய சமூகத்தைச் சேர்ந்தோர் அதிகரித்து வருவது கவலைக்குரியது. இது குடும்பங்களிலும் சமுதாயத்திலும் பயமும் அச்சமும் உருவாக்குகிறது. எனவே காவல் துறையிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்:
- நடவடிக்கைக்கு முன் சரியான நுண்ணறிவு சேகரிப்பு
- ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட விசாரணை
- சுட்டுகொல்லுவதற்கு பதிலாக கைது செய்ய முன்வருதல்
- சுட்டு கொல்லப்படும் சம்பவங்களுக்கு தனித்தனி சுயாதீன ஆய்வு குழு
- குடும்பங்களுடனும் சமூக தலைவர்களுடனும் வெளிப்படையான தகவல் பரிமாற்றம்
நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் கடமை உள்ளது. அதே நேரத்தில், ஒவ்வொருவரின் உரிமையும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொழில்முறையாகவும் பொறுப்புடன் நடக்கவும் கடுமையான வழிகாட்டுதலும் கண்காணிப்பும் தேவையானவை.
மலேசிய இந்து சங்கம், அரசாங்கத்துடனும் தொடர்புடைய அமைப்புகளுடனும் இணைந்து, அனைத்து மலேசியர்களுக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை உறுதி செய்யத் தயாராக உள்ளது.
ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன்
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்

