
தைவானில் நடைபெற்ற World Robot Games (WRG) 2025) சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டியில் உலகச் சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் பதிவு செய்தார்.
நமது மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில், குறிப்பாக இயந்திரவியல் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது தமிழ்ப்பள்ளிகள் மீதான நம்பிக்கையை மேலும் உயர்த்தியிருக்கிறது. நாடு செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் தொழில்நுட்பத்தை நோக்கி வளர்ந்து வரும் இவ்வேளையில், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்தச் சாதனை ஒரு மைல்கல் ஆகும் என அமைச்சர் தெரிவித்தார்.
உலகலாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குகொண்ட இந்தப் போட்டியில் ஜொகூர் துன் அமீனா தமிழ்ப்பள்ளி மற்றும் பினாங்கு சுப்பிரமணிய பாரதி ஆகிய தமிழ்ப்பள்ளிகளிலிருந்து மட்டும் அல்லாது,தமிழ்ப்பள்ளிகளில் பயின்று தற்போது இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் மொத்தம் 24 பேர் பதக்கம் வென்றுள்ளனர் என Syscore Academy நிறுவனத்தின் இயக்குனர் காளிதாசன் தெரிவித்துள்ளார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய இலக்கவியல் பொருளாதார நிறுவன (MDEC) அங்கீகாரத்தோடு செயல்படும் இந்த Syscore Academy நிறுவனம்,இந்திய மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் கோலோச்ச உறுதுணையாக இருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் கூறினார்.
அதோடு இந்திய மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக, ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகத் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஊக்கமும் முழு ஒத்துழைப்பும் வழங்கி, உலகச் செயற்கை நுண்ணறிவு அரங்கில் கால் பதிக்க வைத்திருப்பது அனைவரையும் பெருமைகொள்ள வைக்கிறது.
இலக்கவியல் தொழில்நுட்ப துறைகளில் ஆர்வம் கொள்ளும் இந்திய மாணவர்களின் முயற்சிகளையும், திட்டங்களையும் இலக்கவியல் அமைச்சு வரவேற்பதோடு, தேவை ஏற்படின் கைகொடுக்கவும் தயாராக உள்ளது என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

