மாணவர் கட்டொழுங்கிற்குக் சனாதனம் தீர்வாகுமா? மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கண்டனம்…

கோலாலம்பூர் டிச 23-
கடந்த 16 டிசம்பர் 2025 அன்று மக்களவையில் பகடிவதைத் தடுப்புச் சட்டப் பரிந்துரை தொடர்பாக நன்னெறிக் கல்வி பாடத்தில் இந்திய வட ஆரிய இரிசிகள் வகுத்தளித்த சனாதன தர்மத்தைக் கற்பிக்க வேண்டும் என வலியுறுத்திய மேலவை உறுப்பினர் (செனட்டர்) மாண்புமிகு முனைவர் லிங்கேசுவரன் அவர்களுக்கு மலேசியத் தமிழர் தேசியப் பேரவைத் தலைவர் திரு.தமிழ்த்திறன் செல்வநாதன் கண்டனத்தைத் தெரிவித்தார்.

வேறுப்பட்ட சமய மதங்களைத் தழுவியிருக்கும் தமிழ் மாணவர்கள் மொழியால் இனத்தால் பண்பாட்டால் தமிழர் என்ற தமிழியல் சிந்தனையோடு வளர்ப்பதற்கும் வளர்வதற்கும் உரிய தளமாக எஞ்சி இருப்பது தமிழ்ப்பள்ளி மட்டுமே.

அப்படியான கட்டமைப்பைச் சமயம், மதம் ஆதிக்கத்தால் திரிபாக்கம் செய்ய தொடர்ந்து சில தரப்புகள் முயற்சித்து வருகின்றனர்.

அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாகத்தான் மாணவர் கட்டொழுங்கை மையப்படுத்தி நன்னெறிக் கல்வி பாடத்தில் சனாதனக் கல்வியை புகுத்தும் பரிந்துரையை மக்களவையில் லிங்கேசுவரன் அரங்கேற்றியுள்ளார்.

தமிழ்க்கூறு நல்லுலகத்து தொல்லாணை நல்லாசிரியர்கள் என போற்றப்படும் அறிவர் பெருமக்கள் வாழையடி வாழையாக கடைபிடித்தும் வழிகாட்டியும் வரும் திருநான்மறை கோட்பாட்டினை கருவூலமாக கொண்டுள்ளது தெய்வத்தமிழ்மறை திருக்குறள்.

நம் நாட்டு பிரதங மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களும், பல சமயங்களில் நாடாளமன்ற அமர்வுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாந்தர்களுக்கும் சமய மத கருத்தியலாளர்களுக்கும் மட்டுமல்லாமல், பல்லுயிர் ஓம்புகின்ற அருள்மறையாம் திருக்குறள் உயர்ப்புடன் இருக்க, இந்திய வடபுலத்து முனிவர்களின் தலைமையில், சமற்கிருத நூல் மரபுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சனாதனக் கொள்கையைத் தமிழ்ப்பள்ளியில் திணிக்க முயல்வது பெரும் தீங்கைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு விளைவிக்கும்.

இவை அறம் பொருள் இன்பம் வீடு எனும் திருநான்மறை கோட்பாட்டையும், தமிழ்மறையாம் தெய்வத்திருக்குறளையும் சிறுமைப்படுத்தும் நடவடிக்கை என கருதுவதாக மலேசியத் தமிழர் தேசியப் பேரவையின் தலைவர் திரு.தமிழ்த்திறன் செல்வநாதன் தெரிவித்தார்.

மாணவர்களிடையிலான ஒழுக்க நெறிச் சிந்தனையை மேம்படுத்துவதற்கும், மாணவர்களிடையே சிறுவயதிலேயே மதப்பிரிவினை எண்ணங்களைத் தவிர்ப்பதற்கும், தமிழர் என்ற இனவுணர்வு சிந்தனையோடு தமிழ்ப்பள்ளி இயங்குவதற்கும் தமிழ் மரபியமே போதுமானது.

தமிழ் மண்ணிலிருந்து தோன்றிய பொதுமரபியல் அறநூல்கள் நிறைந்து இருக்க, தமிழ்ச்சான்றோர்களின் வாழ்வியல் நன்னெறிக் கருத்துகள்
கொட்டிக்கிடக்கும்போது எதற்காக இந்திய வட ஆரிய சமற்கிருத வழியான சனாதனக் கருத்துகள் தமிழ்ப்பள்ளியில் வேண்டும்?

இதற்கான நோக்கம் என்ன? தமிழ்ப்பள்ளியில் எதனைக்கொண்டு வர அல்லது எவற்றை மாற்ற இந்தக் காய் நகர்த்தல் நிகழ்ந்தப்படுகின்றது எனப் பல ஐயங்கள் தமிழ்-தமிழர்-தமிழ்ச்சமயம் சார்ந்த சிந்தனையாளரிகளிடம் எழுந்துள்ளன.

எனவே, மத அமைப்புகளும், அரசியல்வாதிகளும் அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கும் முன் தமிழர் அமைப்புகளோடும் தமிழாய்ந்த தமிழ்ச்சான்றோர் பெருமக்களின் மதியுரையைக் கேட்டும் பரிந்துரையை முன்வைத்தல், இவ்வாறான முரண்களையும் எதிப்புகளையும் தவிர்க்கலாம் என திரு.தமிழ்த்திறன் செல்வநாதன் அறிவுறித்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles