பக்தர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் மரியாதை – பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்!

கோலாலம்பூர் டிச 23-

மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் என்ற வகையில், நாட்டிலுள்ள அனைத்து கோயில் நிர்வாகிகளும் மற்றும் கோயில் பிரதிநிதிகளும், பக்தர்களை எப்போதும் மரியாதையுடனும் பணிவுடனும் அணுக வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று அதன் தலைவர் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் இருப்பது இயல்பானதே.

ஆனால் அவை பக்தர்களுக்கு தெளிவாகவும் நிதானமாகவும், மரியாதை குன்றாத முறையிலும் எடுத்துரைக்கப்பட வேண்டும்.

சில கோயில் பிரதிநிதிகளின் பொருத்தமற்ற நடத்தை, பக்தர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நமது இனத்திற்கும் இந்து சமயத்திற்கும் தவறான படிமத்தை உருவாக்குகிறது.

மலேசியா என்பது பல்சமூக, பல்சமய பின்னணியைக் கொண்ட நாடு. இத்தகைய சூழலில், நாம் நமது இந்திய / இந்து மரபுகள், பண்பாடுகள் மற்றும் சமய நம்பிக்கைகளை உயர்ந்த ஒழுக்கத்துடனும் நாகரிகத்துடனும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

இன்றைய காலம் டிஜிட்டல் யுகம். ஒரே ஒரு தவறான செயல் அல்லது சொல் கூட, சமூக ஊடகங்கள் மூலம் பெரும் சர்ச்சையாக மாறி, கோயிலுக்கும் சமுதாயத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இதை கோயில் பிரதிநிதிகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

கோயில் பிரதிநிதிகள், கோயிலின் உரிமையாளர்கள் போல் நடந்து கொள்ளாமல், பக்தர்களுக்கு சேவை செய்யும் பொறுப்பாளர்கள் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஒரு நல்ல கோயில் பிரதிநிதி, பக்தர்களை கையாளும் திறன், சிறந்த நிர்வாகத் திறன் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

இத்தகைய பண்புகள் இல்லாததால்தான், இன்றைய சூழலில் பலர் கோயில்களுக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர் என்பது வருத்தமளிக்கும் உண்மை.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், ஒருநாள் பக்தர்கள் வருகை குறைந்து, பல கோயில்கள் மூடப்படும் நிலை உருவாகக்கூடும் என்பதையும் நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

எனவே, அனைத்து கோயில் நிர்வாகிகளும் மற்றும் பிரதிநிதிகளும், தங்களின் பொறுப்பை உணர்ந்து, பக்தர்களுடன் மரியாதை, பொறுமை மற்றும் மனிதநேயத்துடன் நடந்து கொண்டு, கோயில்களை உண்மையான ஆன்மிக மையங்களாகப் பாதுகாக்க வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.

ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் AMN,ASA
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles