
கூலாய், டிச 27-
சில தினங்களுக்கு முன் ஜ.செ.க தலைவர்களுடன் இணைந்து, கங்கார் புலாய் பகுதியில் அமைந்துள்ள மலை ஆளும் முருகன் பெருமாள் ஆலய பக்தர்கள் சங்க நிர்வாகக் குழுவை, அதன் தலைவர் திரு மணிமாறம் தலைமையில் சந்தித்தேன் என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நிக் சிங் தெரிவித்துள்ளார்.
இவ்வாலயம் சமீபத்தில் கூலாய் நகராட்சி மன்றத்தால் இடிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு, ஆலய நிர்வாகக் குழு எதிர்கொண்டு வரும் உண்மையான நிலைமைகள், இடிப்பு நடவடிக்கையின் பின்னணி மற்றும் அதன் காரணமாக சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆழமாக புரிந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்றார்.
எங்களின் வருகை, ஒற்றுமையும் அக்கறையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடனும், நியாயமான, சமநிலையான மற்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் தீர்வுகளை ஆராயும் முயற்சியாகவும் அமைந்தது.

என்னுடைய நிலைப்பாடும், ஜ.செ.க வின் நிலைப்பாடும் ஒன்றே. வழிபாட்டுத் தலங்கள் என்பது பக்தர்களுக்கு மிகுந்த ஆன்மீக அர்த்தம் கொண்ட புனித தலம்.
எனவே, வழிபாட்டுத் தலங்களைச் சார்ந்த எந்தவொரு விவகாரமும் மரியாதை, உணர்திறன் மற்றும் விவேகத்துடன் அணுகப்பட வேண்டும்.
அதே நேரத்தில், நில நிர்வாகம் மற்றும் திட்டமிடல் தொடர்பான சட்ட கட்டமைப்பையும், சம்பந்தப்பட்ட அதிகாரங்களின் அதிகார வரம்பையும் நான் மதிக்கிறேன்.
சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், மனிதநேயம், சமூக நம்பிக்கை, இன மற்றும் மத நல்லிணக்கம் ஆகிய அம்சங்களும் நல்ல மற்றும் பொறுப்பான ஆட்சியின் அடிப்படையாகும்.
இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் நோக்கில், ஆலய நிர்வாகக் குழு ஜோகூர் மாநில முதலமைச்சர் அவர்களிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, இவ்விவகாரம் விரைவில் நல்ல தீர்வை அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இது சமூக நம்பிக்கையையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்கு முக்கியமானதாகும்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், திரு போர் யாங், மலாக்கா சாமிநாதன், கார்த்தியாயிணி, மற்றும் ஜ.செ.க ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

