ஊழலை ஒழிக்கவும் சிறந்த நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும் மாமன்னர் வலியுறுத்தல்: அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

கோலாலம்பூர், ஜன 19- நாட்டின் நற்பெயரைப் பேணுவதற்கு சிறந்த நிர்வாகத் திறனை (Governance) வலுப்படுத்துவது அவசியம் என்றும், ஊழல் தொடர்பான விவகாரங்களில் எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று வலியுறுத்தியுள்ளார்.

15-ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய மாமன்னரின் இத்திருவுரை, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் போராடுவதில் மக்கள் பிரதிநிதிகள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

மாமன்னரின் உரை சுமார் 15 முதல் 18 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்தாலும், அதன் உள்ளடக்கம் மிகவும் ஆழமானது மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களைக் கொண்டது என்று ஃபஹ்மி விவரித்தார்.

குறிப்பாக, தற்போதைய அமைச்சர்கள் மற்றும் கடந்த காலங்களில் ஊழலில் ஈடுபட்டவர்கள் என அனைவருக்கும் இது ஒரு நினைவூட்டலாக அமையும் எனக் குறிப்பிட்ட அவர், அரசாங்கமும் அமலாக்க நிறுவனங்களும் தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நேரடி உத்தரவு இதில் அடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தவிர, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் சவால்கள் குறித்தும் மாமன்னர் கவலை தெரிவித்துள்ளார். இணையதளங்களில் பரப்பப்படும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) உள்ளடக்கங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைக் களைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் டிஜிட்டல் சூழலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும், பெருகிவரும் இணையப் பயன்பாட்டிற்கு ஏற்ப பாதுகாப்பு விதிமுறைகள் வலுப்படுத்தப்படும் என்றும் ஃபஹ்மி ஃபட்சில் செய்தியாளர்களிடம் உறுதி அளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles