சாரதா தேவி குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு கோபிந்த் சிங், சுவா வெய் கியாட்  RM60,000 நன்கொடை

கிட்டத்தட்ட தனது வளாகத்தை இழக்கும் நிலையை எதிர்கொண்ட குழந்தைகள் பராமரிப்பு மையமான மலேசியா ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் எதிர்காலம், டமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ வழங்கிய RM50,000 நன்கொடையின் மூலம் காப்பாற்றப்பட்டது. இதனால் அந்த மையம் தொடர்ந்து செயல்பட முடிந்துள்ளது.

ரவாங் பகுதியில் 27 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பராமரிப்பு மையம், அதன் கட்டிடம் வளாக உரிமையாளரால் விற்கப்படுவதைத் தடுக்க RM800,000 வரை நிதி தேவைப்பட்டதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

“இந்த RM50,000 மற்றும் பல தரப்பினரின் நன்கொடைகளின் மூலம், இந்த பராமரிப்பு மையம் காப்பாற்றப்பட்டு அதன் செயல்பாடுகளையும் நலப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ள முடிந்துள்ளது,” என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்த மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு வசிப்பவர்களுடன் கலந்துரையாடி, மையத்தின் நிர்வாகம் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்தும் கோபிந்த் சிங் ஆய்வு செய்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ கிரீன் பார்க் பகுதியில் உள்ள அந்த பராமரிப்பு மையத்திற்கு மேற்கொண்ட பயணத்தில் தாமும் கலந்து கொண்டதாக ரவாங் மாநில சட்டமன்ற உறுப்பினரான சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

இதற்கிடையில் வெய் கியாட் RM10,000 நன்கொடை வழங்கியதோடு குறுகிய காலத்தில் நிதி திரட்ட ஒன்றிணைந்து செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

“இதுவே நமது சமூகத்தின் கருணை மற்றும் அக்கறையின் சான்றாகும்,” என அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles