
கோலாலம்பூர், ஜனவரி 28 — இந்த ஆண்டு தைப்பூச விழாவிற்கு பத்துமலைக்கு 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. நீண்ட விடுமுறை காரணமாக கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் கோவில் அறங்காவலர் டத்தோ சிவகுமார் நடராஜா கூறுகையில், பக்தர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள், பொது வருகையாளர்கள் உள்ளிட்டோர் விழா காலம் முழுவதும் வருவார்கள் என்பதை கணக்கில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
“கடந்த ஆண்டு 4 முதல் 7 நாட்களில் சுமார் 2.5 மில்லியன் பேர் வந்தனர். இந்த ஆண்டு நீண்ட விடுமுறை இருப்பதால் இன்னும் அதிக எண்ணிக்கை எதிர்பார்க்கப் படுகிறது,” என்று அவர் பெர்னாமா விடம் தெரிவித்தார்.
தைப்பூசம் ஞாயிறு (பிப்ரவரி 1) அன்று வருகிறது; அது கூட்டரசு பிரதேச நாளுடன் ஒத்துப்போகிறது. விழா சுமூகமாக நடைபெறுவதற்கு பாதுகாப்பு மற்றும் சுத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது 2026 வருகை மலேசியா பிரச்சாரத்திற்கு ஏற்ப அமையும் என்று சிவகுமார் கூறினார். கோவில் நிர்வாகம் மலேசிய அரச போலீசார் (PDRM) உடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல் படுகிறது.

