ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி முடிந்தவரை மலிவாக இருக்க வேண்டும்- அன்வார்

ஷா ஆலம், பிப்ரவரி 5— உயர்கல்விக்கான வாய்ப்புகள் மிகக் குறைந்த செலவில் வழங்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உதவி தேவைப்படும் பிரிவினருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். இருப்பினும், அரசாங்கத்தின் கடன் சுமை பில்லியன் கணக்கான ரிங்கிட்டை எட்டியுள்ளதால், தற்போதைய கல்வி உதவிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையிலும் படிப்படியாகவும் செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு இலவசக் கல்வி பெறும் ஏழை மாணவர்களின் எண்ணிக்கையை 5,000-லிருந்து 10,000-ஆக அரசாங்கம் உயர்த்தியுள்ளதாகவும், இந்தத் தரப்பினருக்கான உதவிகளை மேம்படுத்துவது குறித்து நிதி அமைச்சுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வி என்பது முடிந்தவரை மலிவாக இருக்க வேண்டும் என்றாலும், நாட்டின் நிதித் திறனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அன்வார் குறிப்பிட்டார். சிறந்த மாணவர்களுக்கான உயர்கல்வி நிதி நிலுவையை (PTPTN) கல்வி உதவித்தொகையாக மாற்றுவது போன்ற கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ள போதிலும், அவை படிப்படியாகவே தீர்க்கப்படும் என்று அவர் விளக்கினார்.

துங்கு அப்துல் ரகுமான் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘அன்வாருடன் ஒரு சந்திப்பு’ நிகழ்ச்சியின் கேள்வி-பதில் அங்கத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். அதே வேளையில், தகுதிகளைப் பூர்த்தி செய்யும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் நிதி அமைச்சருமான அவர் வெளியிட்டார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles