குப்பைகளை வீசும் குற்றவாளிகளுக்குப் பிப்ரவரி 13-இல் ஒரே நேரத்தில் சமூக சேவை தண்டனை

கோலாலம்பூர், பிப்ரவரி 5— குப்பை கொட்டிய குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அனைவரும் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி ஒரே நேரத்தில் சமூக சேவை உத்தரவை மேற்கொள்வார்கள் என்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பின்படி, குற்றவாளிகள் சாக்கடைகளைச் சுத்தம் செய்தல், சாலைகளைப் பெருக்குதல் மற்றும் பொதுக் கழிப்பறைகளைக் கழுவுதல் போன்ற பணிகளைச் செய்து இந்தத் தண்டனையை நிறைவேற்றுவார்கள் என்று அவர் கூறினார்.

2007-ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைச் சட்டத்தில் சிறிய அளவிலான குப்பைகளை வீசுவது தொடர்பான திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை 462 உள்ளூர்வாசிகள் மற்றும் 138 வெளிநாட்டினர் என மொத்தம் 600 குற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 600 வழக்குகளில், 46 வழக்குகள் நீதிமன்ற விசாரணைத் தேதியைப் பெற்றுள்ளன என்றும், மூன்று வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குப்பைகளை எங்கும் வீச வேண்டாம் என்று எச்சரித்த அவர், நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டு இதற்கான அதிகபட்ச அபராதம் 2,000 முதல் 10,000 ரிங்கிட் வரை விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

இன்று மக்களவையில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அவர், இந்த அணுகுமுறை தண்டனை வழங்குவதை மட்டும் நோக்கமாகக் கொண்டது அல்ல என்றும், மாறாகத் தூய்மையைப் பேணுவதில் மலேசியர்களுக்குக் கல்வியறிவு புகட்டுவதே இதன் நோக்கம் என்றும் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles