மலேசியப் பிறப்புச் சான்றிதழில் ‘தமிழர்’ அடையாளம்: மே 17-இல் கோரிக்கையை வலுப்படுத்தும் எழுச்சி மாநாடு!

கோலாலம்பூர், பிப் 7: மலேசியத் தமிழர்களின் பிறப்புச் சான்றிதழில் ‘இந்தியர்’ என்ற பொதுவான அடையாளத்திற்குப் பதிலாக, ‘தமிழ்/தமிழர்’ எனப் பதிவு செய்ய அனுமதி கோரி, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை வரும் மே 17-ஆம் தேதி ஷா ஆலாம் இலத்தானிய மண்டபத்தில் பிரம்மாண்டமான ‘இன அடையாள மாநாட்டை’ நடத்துகிறது.

தற்போதுள்ள நடைமுறையில் தமிழர்கள் தங்களின் வரலாற்று அடையாளத்தைத் தொலைத்து வருவதாகவும், பதிவுத்துறையில் இது குறித்து பல நிர்வாகச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2024-இல் தேசியப் பதிவுத்துறையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வ கோரிக்கையை முன்வைக்க இம்மாநாடு ஒரு முக்கியத் தளமாக அமையும்.

“நாங்கள் தமிழர்” எனும் கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் பதிவு முறையில் உள்ள சிக்கல்களை எளிமையாக்க வேண்டும், பழைய ஆவணங்களில் நீக்கப்பட்ட “தமிழ்” என்ற சொல்லை மீண்டும் சேர்க்க வேண்டும், நாடு தழுவிய அளவில் இதற்கான தெளிவான வழிகாட்டல்களைப் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் போன்ற முக்கிய நோக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. 18-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளோடு இந்த இன அடையாள முன்னெடுப்புக்கு மலேசிய தெலுங்கு சங்கமும் ஆதரவு வழங்குகின்றது. இம்மாநாட்டிற்குப் பேராளர் பங்கேற்புக் கட்டணமாக 50 ரிங்கிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள தமிழர்கள் இணையப் படிவத்தின் வழி முன்பதிவு செய்து, பண்பாட்டு உடையணிந்து இம்மாநாட்டில் திரளாகக் கலந்துகொள்ளுமாறு பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles