தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவையின் புதிய தேசியத் தலைவராக க.கணேசன் தேர்வு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவையின் தேசியத் தலைவராக 2013 ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றிய மணிச்சுடர்,மணிச்செம்மல் மணிபூஷன் டத்தோ ஆர்.ஆர்.எம்.கிருஷ்ணன் அவர்கள் கடந்த 16.11.2025 இயற்கை எய்தினார்.

பேரவைத் தலைவரின் மறைவுக்குப் பின் தேசியத் துணைத் தலைவராக பொறுப்பு வகித்திருந்த இப்பேரவையின் சிலாங்கூர் மாநிலத் தொடர்புக் குழு தலைவர் மணித்தென்றல் மு.இராமசந்திரன் அவர்கள் இடைக்கால தேசியத் தலைவரானார்.

இடைக்கால தேசியத் தலைவராக பொறுப்பேற்ற மணித்தென்றல் மு.இராமசந்திரன் அவர்கள் கடந்த 6.1.2026 இல், அகால மரணம் அடைந்தார்.

காலியான தேசியத் தலைவர்,தேசியத் துணைத் தலைவர் மற்றும் தேசிய உச்சமன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்வு, கிள்ளான் மாப்பிள்ளை உணவக கூட்ட அறையில் 7.2.2026 பிற்பகல் மணி 12.00 அளவில் தொடங்கிய 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது உச்சமன்றக் கூட்டத்தின் வாயிலாக நடைபெற்றது.

மலேசிய சங்கங்களின் பதிவு இலாகாவின் அதிகாரப்பூர்வ பதிவை பெற்ற இவ்வமைப்பின் அமைப்புச் சட்டவிதி 8.8 க்கு ஏற்ப காலியான பொறுப்புகளுக்கான பொறுப்பாளர்கள்
அடுத்து வரும் ஈராண்டு பேராளர் மாநாடு நடைபெறும் வரை உச்சமன்றக் கூட்டத்தின் வாயிலாக நிரப்பப்பட வேண்டும் என அமைப்புச் சட்டவிதியில் வரையறுக்கப்பட்டிருப்பதால் பேரவையின் உச்சமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்கள் முறையே புதிய பொறுப்பாளர்களை ஏகமனதாக தேர்வு செய்தனர்.

அந்த வகையில் இப்பேரவையின் கெடா மாநிலத் தொடர்புக் குழுத் தலைவர் க.கணேசன் புதிய தேசியத் தலைவராக ஏகமனதாக தேர்வு பெற்றார்.

தேசியத் துணைத் தலைவராக சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு பொருளாளர் மணிச்செம்மல் டாக்டர் பெ.வேலாயுதம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காலியான (4) நான்கு உச்சமன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இப்பேரவையின் மாநிலத் தொடர்புக் குழு வாரியாக கீழ்க்காணும் நால்வர் ஏகமனதாக தேர்வு பெற்றனர்.
தேர்வு பெற்றவர்களின் விவரம் பின் வருமாறு :- சி.சுப்ரமணியம் (சிலாங்கூர் மாநிலம்),
எஸ்.பி.கார்த்திகேசு (கெடா மாநிலம்),அ.செல்வராஜூ (கூட்டரசு பிரதேசம்) தி.சத்தியசீலன் (நெகிரி செம்பிலான் மாநிலம்)

இப்பேரவையின் தேசியப் பொதுச் செயலாளர் மணித்தென்றல் டாக்டர் இர.செல்வராஜூ அவர்கள் வரவேற்புரையாற்றி தொடங்கிய உச்சமன்றக் கூட்டத்தில் பேரவையின் புதிய தலைவராக தேர்வு பெற்ற க.கணேசன் அவர்கள் ஏற்புரையாற்றுகையில் அனைவருக்கும் நன்றி கூறி
தமது புதிய செயல் திட்டங்களில் ஒன்றாக இப்பேரவையில் உறுப்பியம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு மரணசகாய நிதி திட்டம் முறையான ஆவணங்களோடு தொடங்கப்படும் என்றார்.

ஒவ்வொரு மாநிலத் தொடர்புக் குழு தலைவர் மற்றும் அவர்தம் நிர்வாகத்தினர் இப்பேரவையின் உறுப்பினர்களுடன் உறவையும் நேரடி தொடர்பையும் ஏற்படுத்தி கொள்வதோடு கடந்த கால அனுபவங்களின் வழி மொழி,இனம்,பண்பாடு மற்றும் சமூகத்தின் நலன் கருதி இயன்ற பயன்மிகுந்த திட்டங்களை வகுத்து செயல்படுவது இவ்வமைப்பின் இலக்காகும் என்றார்.

தமிழ் இளைஞர் மணிமன்றங்களில் உறுப்பியம் பெற்று பணியாற்றிய நாற்பது (40) வயதிற்கு மேற்பட்டவர்களை அடையாளங்கண்டு அவர்களையும் இவ்வமைப்பில் உறுப்பியம் பெற்று உறுப்பிய எண்ணிக்கையை பெருக்க வேண்டும் என்றார். தற்போதைய சூழலுக்கேற்ப பேரவையின் அமைப்பு விதிகளில் அடுத்து வரும் ஈராண்டு பேராளர் மாநாட்டில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தில் பேரவையின் ஆலோசகர் மணிச்செம்மல் ம.பழனிவேலு அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் வாயிலாக 2007 ஆம் ஆண்டு மலேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இளைஞர் மேம்பாட்டு மசோதவிற்கேற்ப நாற்பது (40) வயதிற்கு மேற்பட்டவர்கள் இளைஞர் இயக்கங்களில் எவ்வித பொறுப்புகளை வகிக்க இயலாது என்ற வயது வரம்பு நிலைநிறுத்தப்பட்டதிற்கிணங்க நாடு தழுவிய அளவில் தமிழ் இளைஞர் மணிமன்றங்களில் மன்றம்,மாவட்டம்,மாநிலம் உட்பட மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசிய அளவிலும் பொறுப்புகளை வகித்த நாற்பது (40) வயதிற்கு மேற்பட்ட மணிமன்ற மணிகள் மணிமன்றங்களின் பொறுப்புகளிலிருந்து விலக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்ட போது மணிமன்றங்களில் சேவையாற்றிய முன்னாள் உறுப்பினர்களுக்கு ஒரு தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஆசியோடு 28.10.2012 இல்,
அமைக்கப்பட்ட மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பேரவை எனும் இவ்வமைப்பிற்கு 9.1.2013 இல்,மலேசிய சங்கங்களின் பதிவிலாகா அதிகாரப்பூர்வ பதிவினை வழங்கியது என்பது குறிப்பிடதக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles