
விதிமுறைகளைப் பின்பற்றாத வழிப்பாட்டுத் தலங்கள் இனியும் அனுமதிக்கப்படாதென அதை இடிப்பது மட்டும் தீர்வல்ல, மாறாக மாற்று வழிகளை கையாள வேண்டுமென மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை பரிந்துரைப்பதாக அதன் துணைத் தலைவர் அருள்மொழி ஆனந்த தமிழன் முனியாண்டி தெரிவித்தார்.
நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே வழிப்பாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. இன்று அரசு நிலம் என சொல்வதற்கு முன்பே அந்நிலத்தில் வழிப்பாட்டுத் தலங்கள் இருந்துள்ளன என்பதை சற்று கவனிக்க வேண்டும். வெறுமனே “அராம்” என சொல்லி இழிவு படுத்துவது ஏற்புடையதல்ல என்றார்.
நம்முடைய வழிப்பாட்டுத் தலங்கள் அமைந்துள்ள நிலங்கள் நான்கு முகமாய் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன:
1.அரசு நிலத்தில் அமைந்துள்ள வழிப்பாட்டுத் தலங்கள்.
தீர்வு:
- அரசு நிலத்தில் அமைந்துள்ள வழிப்பாட்டுத் தலங்களின் வரலாற்றுப் பின்னணி, தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவை ஆகியவற்றை மதிப்பீடு செய்து அரசு அங்கீகரித்தல் வேண்டும்.
- அந்த நிலத்தை வழிப்பாட்டுத் தலத்திற்காக அரசிதழில் பதிவிட்டு வெளியிடுதல் வேண்டும்.
- அல்லது, அந்த வழிப்பாட்டுத் தலத்தை அனுமதிக்கப்பட்ட, மேலும் பொருத்தமான இடத்திற்கு மாற்றுதல் வேண்டும்.
- தோட்டம் அல்லது பண்ணை நிலத்தில் அமைந்துள்ள வழிப்பாட்டுத் தலங்கள்.
தீர்வு:
- மலேசிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு முன்னரே இந்த வழிப்பாட்டுத் தலங்கள் இருந்து வந்துள்ளன என்பதை கருத்தில் கொண்டு, அவை தற்போதைய மலேசிய அரசியலமைப்பின் கீழ் சட்டபூர்வமானவையாகக் கருதப்பட வேண்டும்.
- அந்த நிலத்தை வழிப்பாட்டுத் தலத்திற்காக ஒதுக்கீடு செய்து, அரசிதழில் வெளியிடுமாறு தோட்ட மேலாண்மையிடம் கோரிக்கை விடுத்தல் வேண்டும்.
- தனியார் நிலத்தில் அமைந்துள்ள வழிப்பாட்டுத் தலங்கள்.
தீர்வு
- தனியார் நிலத்தில் அமைந்துள்ள வழிப்பாட்டுத் தலங்களின் நிலத்தை வாங்குதல்.
- அல்லது, அனுமதிக்கப்பட்ட/அனுமதி வழங்கப்பட்ட புதிய இடத்திற்கு வழிபாட்டுத் தலங்களை மாற்றுதல் வேண்டும்.
- ஒருவேளை எந்தத் தீர்வும் எட்டப்படாவிட்டால் பின்னரே நீதிமன்ற உத்தரவைக் கோருதல் வேண்டும்.
- வீட்டு முற்றத்தில் அமைந்துள்ள வழிப்பாட்டுத் தலங்கள்.
தீர்வு:
- உரிமையாளர்கள் ஊராட்சி மன்றத்திடம் தகவல் அளித்து, அனுமதி பெறவேண்டும்.
இச்சிக்கல்களின் நிரந்தர தீர்வுகளாக:
- மலேசிய அரசியலமைப்பின் அடிப்படையில் நிர்வாகம் மேற்கொள்வதற்கான “வழிப்பாட்டுத் தலங்களின் சமயத் துறை” ஒன்றை நிறுவுதல் வேண்டும்.
- புதிய குடியேற்றங்களுக்கான வழிப்பாட்டுத் தலங்களுக்கு நிலம் வழங்குவதை ஊராட்சி மன்றங்கள் உறுதி செய்தல் வேண்டும்.
- அனுமதியின்றி வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்படுவதை, ஊராட்சி மன்ற அதிகாரிகள் ஆரம்ப கட்டத்திலேயே கண்காணித்து நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இனி எந்தவொரு மாற்று நடவடிக்கைகளுக்கு உட்படும் வழிபாட்டுத் தலங்களை பிற இனத்தார்கள் கலவாமல் மக்கள் மனம் புண்படாமல் சமயத்துறை மற்றும் சமய அமைப்புகளின் வழிகாட்டுதலில் மட்டுமே அகற்றப்பட அல்லது தீர்வு காணப்பட வேண்டும்.
இப்படி நேர்த்தியான, நிறைவான, நியாமான, நடுநிலையான, சமநிலையான தூர நோக்கான அணுகு முறை நடவடிக்கைகளை அரசும் வழிப்பாட்டுத் தலங்களின் நிர்வாகங்களும் பின்பற்றி வந்தாலே நாட்டின் நிலவும் வழிப்பாட்டுத் தலங்களின் நில சிக்கல்கள் சர்ச்சைகள் எழாமல் இருக்குமென மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை பரிந்துரைப்பதாக அதன் துணைத் தலைவர் அருள்மொழி ஆனந்த தமிழன் முனியாண்டி கேட்டுக்கொண்டார்.

