

சமூகப் பாதுகாப்பு அமைப்பு (பெர்கேசோ) கடந்த ஆண்டு நாடு தழுவிய அளவில் 1.15 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு 6.65 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பலன்களை வழங்கியுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறந்த செயல்திறன் என்றும், அந்த ஆண்டில் 6.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பலன்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இது நாட்டின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு வலுவாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் வளர்ந்து வருவதைப் பிரதிபலிக்கிறது என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
“ஒப்பீட்டளவில், 2024-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 6.1 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பலன்களின் மொத்த மதிப்பு 8.34 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பயனாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 5.06 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதிகமானோர் சந்தா செலுத்துவதை நாம் காண்கிறோம், அதுவே மிக முக்கியம்,” என்றார்.
“இந்த முயற்சியில், பெர்கேசோ நிர்வாகத்தின் சாதனைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த இலக்கை அடைவதில் அவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி தங்கள் கடமைகளை அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
சுங்கை பூலோவில் நடைபெற்ற ‘கேசுமா பெர்கேசோ லிண்டுங் 2026’ சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டனர்.

