‘என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்’ – விமர்சகர்களுக்கு TMJ சவால்

ஜொகூர் பாரு, மார்ச் 6- ஹரிமாவ் மலாயா தேசிய காற்பந்து அணியின் 7 மரபுவழி  வீரர்களின் ஆவண மோசடி விவகாரத்தில் தனக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டுவோர், அந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லலாம் என்று ஜே.டி.டி (JDT) உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார்.

“போதுமான ஆதாரங்கள் இருந்தால், என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்,” என அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட 7 வீரர்கள் மீதான ஆவண மோசடிக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (FIFA) அவர்களுக்கு அபராதமும், விளையாட்டுத் தடையும் விதித்தது.

 இந்தத் தீர்ப்பை எதிர்த்து மலேசியக் காற்பந்து சங்கம் (FAM) அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்தபோதிலும், FIFA-வின் முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஆவண மோசடி விவகாரத்திற்கு TMJ-தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் காற்பந்து ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

 அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, ஜோகூர் பட்டத்து இளவரசரான துங்கு இஸ்மாயில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதை துங்கு இஸ்மாயிலின் இந்தப் பதிவு உணர்த்துகிறது.

இதற்கிடையே, CAS-இன் தீர்ப்பிற்குப் பிறகு, இவ்விவகாரத்தில் ஆசியக் காற்பந்து சம்மேளனத்தின் (AFC) ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவிற்காக FAM காத்திருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles