காப்பாரில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; உயிரிழந்த சந்தேக நபர் 23 குற்றப் பின்னணியைக் கொண்டவர் – போலீஸ் தகவல்

கிள்ளான், மார்ச் 6- சிலாங்கூரின் காப்பார், ஜாலான் கெரெத்தாப்பி லாமா பகுதியில் நேற்று காலை வேளையில்  நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேக நபர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் விடுத்துள்ள அறிக்கையில், நேற்று காலை மணி 9.51 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் கம்போங் பெரெப்பாட்டில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைக் கண்ட அந்தத் தொழிலாளியின் முதலாளி, உடனடியாகத் தனது வாகனத்தில் அந்த மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து துரத்தியுள்ளார்.

 ஜாலான் கெரெத்தாப்பி லாமா பகுதியில் வைத்து, சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி மிரட்டியபோது, அந்த வாகன ஓட்டி மோட்டார் சைக்கிளை மோதினார்.

 இதில் நிலைதடுமாறி விழுந்ததில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; ஓட்டுநர் காயமடைந்தார்.உயிரிழந்த சந்தேக நபர் கொலை, கொலை முயற்சி மற்றும் கும்பல் கொள்ளை உள்ளிட்ட 23 குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இதேவேளையில், காயமடைந்த மற்றொரு நபர் 10 குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்றும், அவர் குற்றவியல் சட்டத்தின் 130V பிரிவின் கீழ் தேடப்பட்டு வரும் நபர் என்றும் டத்தோ ஷாசெலி கஹார் குறிப்பிட்டார்.மேலும், சந்தேக நபர்களை மோதிய 49 வயதுடைய வாகன ஓட்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles