கோவில்களை இடிப்பதாக மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுங்கள்! அட்டர்னி ஜெனரலுக்கு அமைச்சர் கோபிந்த் சிங் வேண்டுகோள்

கோலாலம்பூர், மார்ச் 10- நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்களை ஒருதலைப்பட்சமாக இடித்துத் தரைமட்டமாக்கப்போவதாக மிரட்டல் விடுத்து வரும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அட்டர்னி ஜெனரல் (ஏஜி) உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவரும்  இலக்கவியல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

கோவில்கள் அமைந்திருக்கும் நில அந்தஸ்து தொடர்பான சிக்கல்களுக்கு பெரும்பாலான மாநிலங்கள் சட்ட ரீதியாகவும் சுமுகமான முறையிலும் தீர்வு காணும் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தாலும், சில தரப்பினர் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முறையான விண்ணப்பங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் பல இடங்களில் இப்பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டு வரும் நிலையில், இத்தகைய மிரட்டல் விவகாரங்கள் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட மிரட்டல் பேர்வழிகளுக்கு எதிராகப் பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்தும் இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை என்பதால் இதில் கூடுதல் கவனம் தேவை என்பதை வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து தாம் அமைச்சரவையில் பலமுறை பேசியுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அட்டர்னி ஜெனரலின் கைகளிலேயே இருப்பதாகவும் தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles