நாட்டிலுள்ள அனாதை மற்றும் முதியோர் இல்லங்களில் உடனடியாக திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும் – டத்தோ டாக்டர் லோகபால மோகன்

கோலாலம்பூர் ஏப்ரல் 3 – செலாயாங் பகுதியில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள அனாதை மற்றும் முதியோர் இல்லங்களில் உடனடியாக திடீர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் முற்போக்கு கட்சி த் (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகபால மோகன் வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளாக ஒரு அனாதை இல்லம் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டு இருப்பது என்பது ஆச்சரியத்தையும் கவலையும் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது உரிய அதிகாரிகள் வழங்கும் உரிமம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் குறைபாடு உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

மேலும், இதுபோன்று பதிவு செய்யப்படாத அனாதை இல்லங்கள் உள்ளனவா,இல்லங்களிலும், அதில் குழந்தைகள் அபாயத்தில் உள்ளார்களா என்ற அச்சமும் இந்த சம்பவம் எழுப்புகிறது.

ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி இருப்பது மிகவும் வேதனைக்குரியது என்றும், இத்தகைய சம்பவங்கள் இனி எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை விரைவாக வெளிக்கொண்டு வந்து, குழந்தைகள் மற்றும் இளைஞர்களை காப்பாற்றிய போலீசாரின் உடனடி நடவடிக்கைக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அனைத்து குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு, உரிமம் பெறப்பட்டு, வழக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து இல்லங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும், அதற்கு பொறுப்பானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் அதிகாரிகளின் “கண்கள் மற்றும் காதுகள்” ஆக இருந்து, இத்தகைய துஷ்பிரயோகங்களை பற்றி தகவல் அளிக்க வேண்டும் என்றும், பலவீனமானவர்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles