
கோலாலம்பூர், ஏப்ரல் 3-
சாலை விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹாபிஸ் ஓமரின் குடும்பத்தினரை தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் மனைவி நூர் இநாடியா, அவரின் 9, 7 மற்றும் 2 வயதான மூன்று குழந்தைகளையும் அவர் சந்தித்தார். குடும்பத்தின் தற்போதைய நிலை குறித்து அவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், குடும்பத்தின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த மனைவியின் நிலை தம்மை வெகுவாகப் பாதித்தாகக் கூறினார்.

இரண்டு வேலைகளைச் செய்து குடும்பத்தைப் பேணி வந்த அமிருல் ஹாபிஸ் ஓமரின் திடீர் மரணம், அந்தக் குடும்பத்தைப் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மது அருந்தி பொறுப்பில்லாமல் வாகனம் ஓட்டியதன் விளைவாக ஓர் அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது மிகவும் கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என துணையமைச்சர் யுனேஸ்வரன் சாடினார்.
மேலும், குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுடன், உயிரிழந்தவரின் மூன்று குழந்தைகளின் கல்விக்காக ஆறு மாத காலத்திற்கு உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தச் சம்பவத்தில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், இவ்வாறான விபத்துகள் இனி நிகழாமல் இருக்க அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“ஒரு தந்தையின் இழப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால், அந்தக் குடும்பம் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்,”.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பம் தனியாக இல்லை, தொடர்ந்து தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் துணையமைச்சர் யுனேஸ்வரன் உறுதியளித்தார்.

