

பெஸ்தாரி ஜெயா, ஏப் 4-
கோல சிலாங்கூர் மாவட்ட மண்ணின் மைந்தர்கள் சார்பில், சமூகப் போராளி சா.ஆ. அன்பானந்தன் நினைவு அறக்கட்டளை சார்பில் இந்த வட்டாரத்தைச் சார்ந்த சுமார் 50 மாற்றுத் திறனாளிகள் நிதி உதவி மற்றும் உணவுப் பொருள்கள் பெற்றுக் கொண்டனர்.
அவர்களில் 6 பேர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. மேலும், சுகாதார முறைப்படி உணவு உபசரிப்பும் நல்கப்பட்டது.
அது மட்டுமின்றி இங்குள்ள பெஸ்தாரி ஜெயா பொது மண்டபத்தில் சுமார் 3 மணி நேரம் இடைவிடாது தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகர் கோவை முரளி மற்றும் உள்ளூர் பாடகர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு வருகையாளர்கள் அனைவரும் வீடு திரும்ப மனமின்றி மகிழ்ச்சியில் மிதந்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதிக் கட்டமாக சா.ஆ. அன்பானந்தன் நினைவு அறக்கட்டளைத் தலைவரும், சமூக சேவையாளருமான திருமூர்த்தி பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் போற்றப்படவேண்டியவர்கள்-வணங்கப்பட வேண்டியவர்கள்.
அந்நிலையில் அவர்களுக்கு பணிவிடை செய்யும் ரவாங் பிரான்சிஸ் சிவா என்ற அரும் மனிதரை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
மேலும், இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்ததுடன், வருகையாளர்களின் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள சகோதரர் மணியரசு வெள்ளையனை வாழ்த்துகிறேன்.
வசதியற்ற மூத்தோர் சமூகத்தினருக்கு அரசாங்கத்தின் சார்பில் சமூக நல இலாகா உதவி செய்கிறது.
இதனை நம் சமுதாயத்தினர் அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய உதவிகளைச் செய்வதற்கு நாங்கள் தயாராகவும் இருக்கிறோம் என இந்த நினைவுறுத்தலை கோல சிலாங்கூர் அருள்மிகு சுப்பிரமணியர் கோயில் அறங்காவலருமான திருமூர்த்தி முன்னுறுத்தினார்.

