இறைபக்தியில் கட்டடக் கலை: இந்திய வம்சாவளியினரின் கோவில்கள் கண்காட்சியை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தொடக்கி வைத்தார்!

கோலாலம்பூர் ஏப் 7-
இந்து கோவில்கள் வெறும் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்ல, நமது வரலாற்றை அடையாளப்படுத்தும் புனித களஞ்சியங்களாகும்.

மலேசியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான புலம்பெயர் இந்திய கோவில்களின் கட்டடக் கலைகளின் மகத்துவத்தையும் அழகியலையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க ‘இறைபக்தியில் கட்டடக்கலை: இந்திய வம்சாவளியினரின் கோவில்கள்’ எனும் சிறப்பு கண்காட்சியை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இது போன்ற கண்காட்சிகள், இந்து கோவில்களை புனிதத் தலங்களாக மட்டுமல்லாமல், வரலாறு, அடையாளம் மற்றும் பரம்பரியத் தொடர்ச்சியின் உயிருள்ள ஆவணங்களாக விளங்குவதை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றன.

தென்னிந்திய மரபுகளால் ஈர்க்கப்பட்ட வானுயர்ந்த கோபுரங்கள் முதல், வட இந்தியப் பாணிகளைப் பிரதிபலிக்கும் நுணுக்கமாகச் சிற்ப நயத்துடன் வடிவமைக்கப்பட்டவை வரை, இந்தியாவைத் தவிர்த்து வேறு நாடுகளில் உள்ள கோவில் கட்டடக்கலை அதன் உண்மை பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

ஆயினும், இந்தக் கட்டமைப்புகள் தனித்து நிற்பதில்லை. உலகெங்கிலும் உள்ள நகரங்களிலும் மாநகரங்களிலும் வானளாவிய கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் நவீன குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் நிற்கவேண்டியதாயிருந்தாலும் அவற்றின் தனித்தன்மையும் பாரம்பரியமும் மறைந்து போவதில்லை, அது தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது என்பதை அமைதியாக நமக்கு நினைவூட்டுகின்றன என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இவைதான் புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்து கோயில்களின் கட்டடக்கலைகளை தனித்துவமிக்கதாகக் காட்டுகிறது. இது கடந்த காலத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான பாரம்பரியத்தின் தொடர் உரையாடலாகும்.

கோவில்கள் நினைவுச் சின்னம் அல்ல; அவை நமக்கான அடித்தளம் என்பதை உணர்த்துகிறது. நாம் வளர்கையில் அதுவும் வளர்கிறது.

லண்டன், பாங்காக், கோலாலம்பூரில் என புலம்பெயர் நாடுகளில் உள்ள கோவில்கள் மதச்செயல்பாடுகளைச் சார்ந்ததாக மட்டும் இல்லை. கோவில்கள் கலாச்சார நங்கூரமாக உருமாறுகின்றன.

புதிய இடங்களில் தங்களது அடையாளங்களை நோக்கிப் பயணிப்பவர்களுக்கு நெருக்கமான ஓர் உணர்வை நமக்கு வழங்குகிறது என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்களை வரைந்தவர்கள் மலேசிய இந்தியர்கள் மட்டும் அல்ல; மலாய் மற்றும் சீன இனத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர்களும் பங்குகொண்டிருப்பது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஏப்ரல் 2ஆம் நாள் தொடங்கி, 27 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி, கோலாலம்பூர் தலைநகரில் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன இலக்கவியல் உலகத்தில், பாரம்பரியத்தை காப்பதா என்பது கேள்வியல்ல; அதை எவ்வாறு நம் வாழ்வில் உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதே முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்து கோவில் கட்டடக்கலை அதற்கான ஒரு வலுவான பதிலாக அமைகிறது — அதை நமது சமூகங்களிலும் சூழல்களிலும் இணைத்துக் கொண்டு, அதன் சாரத்தை இழக்காமல், மென்மேலும் வளர்த்துக் கொள்வது நமது பொறுப்பு என அமைச்சர் கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

அதனால், இத்தகைய புனிதக் கட்டடங்களை பாதுகாத்து பராமரிப்பதும் அவற்றின் அர்த்தத்தை உணர்ந்து மதிப்பளிப்பது அவசியம்.

இது வெறும் வரலாற்றைச் சேமிப்பதாகிவிடாது: அதை கொண்டாடி, நமது எதிர்கால தலைமுறையினரை இதனைப் பின்பற்ற ஊக்குவிக்கச் செய்வதாகும்.

உலகம் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், நமது பண்பாடு மற்றும் கலாச்சாரம் அதனுடன் இணைந்து பயணிக்கும்போது மட்டுமே மனித முன்னேற்றம் முழுமை பெறும் என்பதும் இந்நிகழ்வின் முக்கியமான செய்தியாக வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles