முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு 40,000 நிதியுதவி – ஆலயங்களின் பாதுகாப்பரணாகத் திகழ்வோம் என லிம் குவான் எங் உறுதி!

பட்டர்வொர்த், மே 3 –

வரலாற்றுப் பின்னணியும் கலாச்சாரப் பெருமையும் கொண்ட பட்டர்வொர்த், சுங்கை பூயூ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத் திருப்பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் 40,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்கியுள்ளார்.

ஆலய வளாகத்தில் நடைபெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய லிம் குவான் எங், இந்து ஆலயங்களின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் தாம் என்றும் உறுதுணையாக இருப்பேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள். அந்த அடையாளங்களைப் பேணிப் பாதுகாப்பதில் ஒரு அரணாகத் திகழ்வது நமது கடமை என அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

திருப்பணி விவரங்கள்

எழுச்சியுடன் உருவாகும் இராஜகோபுரம்
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு, பிரபல சமூக சேவகர் அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளை அவர்களால் கும்பாபிஷேகம் கண்டு புகழ்பெற்ற இந்த ஆலயம், தற்போது நவீனப் பொலிவுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.
பிரம்மாண்டமான இராஜகோபுரம் அமைத்தல், ஆலயத்தை புதுப்பிதல் என்று திருப்பணி வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

டத்தோ செல்வநாதன் (தலைவர்), தங்கமணி சுந்தரம் (செயலாளர்), மெத்தியூ ஃரான்சிஸ் (துணைத் தலைவர்) ஆகியோர் தலைமையில் நிதி திரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவர்களின் கோரிக்கையை ஏற்று, பாகான் நாடாளுமன்றத் தொகுதி நிதியிலிருந்து 40,000 ரிங்கிட் தொகை நேரடியாக ஆலய வங்கி கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள்
இந்த நிதியுதவி வழங்கும் விழாவில் லிம் குவான் எங் அவர்களுடன் இணைந்து பல முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
குமரன் கிருஷ்ணன் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர்
ச்சீ இயேன் கீன் பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் முன்னாள் செனட்டர்
லிங்கேஸ்வரன் சர்மா செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர்,
மாஸ்டர் இராஜேந்திரன் ஜே கேகே தலைசர்.
ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆலயத் திருப்பணிகளுக்குத் தேவையான உடனடி உதவியைச் செய்த லிம் குவான் எங் அவர்களுக்கு நிர்வாகக் குழுவினர் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles