
புத்ராஜெயா, மே 8: செல்லுபடியாகும் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் மலேசியப் பிரஜைகள், அதனை மலேசிய ஓட்டுநர் உரிமமாக (LMM) மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து அமைச்சு (MOT) அறிவித்துள்ளது.
இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மலேசியர்களின் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் முறையானதாகவும், தற்போதும் புழக்கத்தில் இருப்பதோடு, எவ்விதத் தடைகளும் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) நிர்ணயித்துள்ள மேம்படுத்தப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) மற்றும் பின்னணிச் சரிபார்ப்புகளுக்கு உட்பட்டது என அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதுமுள்ள அனைத்து ஜே.பி.ஜே (JPJ) அலுவலகங்களிலும் அமலுக்கு வருகிறது.
வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது வசிக்கும் மலேசியர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, அவர்களின் போக்குவரத்துத் தேவைகள் எவ்விதத் தடங்கலும் இன்றி அமைவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விதிகளின்படி, மலேசிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பே வெளிநாட்டு உரிமம் வைத்திருப்பவர்கள், ‘மலேசியா எனது இரண்டாவது இல்லம்’ (MM2H) திட்டத்தில் உள்ளவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த உரிமை மாற்றம் அனுமதிக்கப்பட்டு வந்தது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றமானது, தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் மலேசியர்களின் நடமாட்டத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Thanks Selangor kini

