சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு வெ.15 ஆயிரம் – மண்டபம் சீரமைப்பிற்கு வெ.30 ஆயிரம் டத்தோ சிவநேசன் வழங்கினார்!!

சுங்கை,மே 8- சுங்கை தமிழ்ப்பள்ளியின் நடவடிக்கைகளுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் இவ்வாண்டும் வெ.15 ஆயிரம் வழங்குவதாகவும் பள்ளியின் சிற்றுண்டிச்சாலை மற்றும் மண்டபத்தை சீரமைத்து மேம்படுத்த வெ.30 ஆயிரத்தை சுங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் ஒதுக்கியிருப்பதாக அவரது சிறப்பு அதிகாரியும் தாப்பா ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஜெயகுமார் பாலக்கிருஸ்ணன் தெரிவித்தார்.

இந்தாண்டு மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் டத்தோ சிவநேசன் சுங்கை தமிழ்ப்பள்ளிக்கு பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைக்கும் மானியத்தை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் கூறிய ஜெயகுமார் சுங்கை சட்டமன்றத்தை உட்படுத்திய ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியின் நலனிலும் டத்தோ சிவநேசன் அக்கறைக் கொண்டிருப்பதாகவும் மேலும் கூறினார்.

சுங்கை தமிழ்ப்பள்ளியின் 63ஆவது விளையாட்டுப் போட்டியை டத்தோ சிவநேசனின் பிரதிநிதியாய் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த போது ஜெயகுமார் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,பேரா மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் மாநில சுகாதாரம்,மனிதவளம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக டத்தோ சிவநேசன் பொறுப்பேற்றதிலிருந்து அதன் மேம்பாடு மற்றும் வளர்ச்சி மட்டுமின்றி அதன் தரங்களும் தொடர்ந்து மிளிர்வதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.

தமிழோடும் தமிழர்களோடும் தொடர்ந்து பயணிக்கும் டத்தோ சிவநேசன் இம்மாநிலத்தின் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியின் செயல்பாட்டையும் நடவடிக்கைகளையும் அணுக்கமாய் கண்காணித்து அதன் மேம்பாட்டிற்காக பெரும் சேவையாற்றியும் வருகிறார்.

அதே வேளையில், சுங்கை – பீடோர் வட்டார தமிழ்ப்பள்ளிகளுக்கும் தாப்பா,தஞ்சோங் மாலிம் வட்டார தமிழ்ப்பள்ளிகளுக்கும் அவரது சேவையும் ஆக்கப்பூர்வப் பணியும் நனிச் சிறந்த நிலையில் செழிமையுறுவதாகவும் ஜெயகுமார் மேலும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, பள்ளியின் தேவைகளை நிறைவு செய்ய பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் தொடர்ந்து ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் ஜெயகுமார் சுட்டிக் காண்பித்தார்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.தியாரன், சுங்கை தமிழ்ப்பள்ளிக்காக டத்தோ சிவநேசனின் பங்களிப்பும் சேவையும் தனித்துவமானது என்றார்.

கேட்கும் போதெல்லாம்; இல்லை என்று சொல்லாமல் நம் தேவைகளை டத்தோ சிவநேசன் நிறைவு செய்து கொடுக்கிறார் என்பதையும் நினைவுக்கூர்ந்து நன்றியும் தெரிவித்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles