தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு டத்தோஸ்ரீ ரமணன் வாழ்த்து; மக்களின் எழுச்சி என வர்ணனை

கோலாலம்பூர், மே 12 —
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக வெற்றி பெற்று, பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

விஜய்யின் இந்த வெற்றி, மக்களின் போராட்ட எழுச்சியின் அடையாளம் என்றும், கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் ஒருவருக்கு இறுதியில் மக்களாட்சி முறையில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இதுவொரு சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விஜய்யின் அரசியல் பயணம், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நீண்டகாலப் போராட்டத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் மலேசியாவின் 10-வது பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகப் பல்வேறு சவால்கள், அரசியல் அழுத்தங்கள் மற்றும் அநீதிகளை எதிர்கொண்டார்.

இந்த இரு தலைவர்களும், நேர்மை, தியாகம் மற்றும் மக்களின் குரலைப் பாதுகாக்கும் துணிச்சலுடன் கூடிய போராட்டத்திற்கு என்றும் வெற்றி உண்டு என்பதை நிரூபித்துள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கலைத்துறையிலிருந்து தமிழகத்தின் உயரிய தலைமைப் பொறுப்பிற்கு விஜய் உயர்ந்துள்ளது, அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு தலைவரின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று ரமணன் கூறினார்.

தமிழகத்தின் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் மக்களின் நலனை வலுப்படுத்துவதில் இந்த வெற்றி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

“விஜய்யின் தலைமையின் கீழ், தமிழ்நாடு ஒரு முற்போக்கான மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட மாநிலமாகத் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று நான் நம்புகிறேன்.

மலேசியா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே நீண்டகால வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியான உறவு நிலவுவதால், பொருளாதாரம், கல்வி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் விளக்கினார்.

மலேசிய மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே நிலவி வரும் சகோதரத்துவ உறவு, எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகத் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான பலமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக மக்கள் அனைவருக்கும் புதிய தலைமைத்துவம் முன்னேற்றத்தையும் நிலைத்தன்மையையும் கொண்டு வர வேண்டும் என மீண்டும் ஒருமுறை அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles