நாட்டின் தலையெழுத்தை வகுப்பறையில் எழுதும் உன்னத சிற்பிகள் : ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

கோலாலம்பூர், மே 16 –
மலேசியாவின் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் அர்ப்பணித்து வரும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது மிக உயரிய நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த வலிமைக்கும் வளர்ச்சிக்கும் ஆசிரியர்களே முதன்மைத் தூண்களாகவும் உந்துசக்தியாகவும் விளங்குவதை பறைசாற்றும் வகையில், இந்த ஆண்டின் ஆசிரியர் தினக் கருப்பொருளாக “Guru Bitara Nadi Negara” (சிறந்த ஆசிரியரே நாட்டின் இதயம்) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கருப்பொருள், தேசத்தின் அச்சாணியாகத் திகழும் ஆசிரியர்களின் உன்னதமான பங்களிப்பை மிகத் துல்லியமாகப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் வகுப்பறைகளில் பாடங்களை மட்டும் போதிப்பவர்கள் அல்லர்; மாறாக, அவர்கள் ஒவ்வொரு மாணவனின் நற்பண்புகளையும் ஒழுக்கத்தையும் செதுக்கும் உன்னதச் சிற்பிகளாகவும், வாழ்வின் அடுத்தகட்ட நோக்கங்களை நோக்கிய பயணத்தில் ஒளியூட்டும் வழிகாட்டிகளாகவும் திகழ்கிறார்கள் என டத்தோஸ்ரீ ரமணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்று சமுதாயத்தில் மிக உயரிய நிலையை எட்டி, சாதனையாளர்களாக வலம் வரும் ஒவ்வொரு தனிமனிதனின் வெற்றிக்குப் பின்னாலும், சோர்வின்றி உழைத்த ஒரு குருவின் வழிகாட்டுதலும் ஊக்கமும் அடித்தளமாக அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கல்வி, சிறந்த ஒழுக்கம் மற்றும் உலகளாவிய போட்டித்திறன் கொண்ட ஒரு வலிமையான தலைமுறையை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஆற்றும் பங்களிப்பு மலேசிய திருநாட்டிற்கு விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.

தற்போதைய நவீன கல்விச் சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மத்தியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், எவ்வித சுயநலமுமின்றி முழுமையான அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் தொடர்ந்து சேவையாற்றி வரும் ஆசிரியர்களின் நெஞ்சுரமும் உறுதிப்பாடும் பெரிதும் போற்றத்தக்கது என்று டத்தோஸ்ரீ ரமணன் பாராட்டியுள்ளார்.

ஆசிரியர்களின் இந்த ஈடு இணையற்ற தியாகத்திற்கும் உழைப்பிற்கும் வெறும் வார்த்தைகளால் மட்டும் முழுமையாக நன்றி செலுத்திவிட முடியாது என்றாலும், மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் ஆற்றி வரும் நற்பணிகளை ஒட்டுமொத்த மலேசிய மக்களும் என்றும் தங்களின் நெஞ்சில் ஏற்றி போற்றுவார்கள் என்பது திண்ணம்.

மலேசியாவின் அனைத்துக் ஆசிரியர்களுக்கும் டத்தோஸ்ரீ ரமணன் தனது இனிய 2026 ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles