

இந்நாட்டில் மலேசிய இந்தியர்கள் எதிர் நோக்கி இருக்கும் தலையாய பிரச்சனைகள் குறித்து மனித வள அமைச்சர் வ. சிவகுமாருடன் மலேசிய இந்து சங்கம் நேற்று முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தியது.
மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன், துணை தலைவர் கணைஷ் பாபு, உதவித் தலைவர் சாந்தா மற்றும் துணை செயலாளர் அழகேந்திரன் ஆகியோர் மனித வள அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியர்கள் எதிர் நோக்கி இருக்கும் குடியுரிமை, பிறப்பு பத்திரம், மதமாற்றம் குறித்தும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகள் இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைத்தனர்.
நாட்டில் 2,500 இந்து ஆலயங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கும் வேளையில் அச்சர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
இதற்கு தீர்வு காண மனித வள அமைச்சர் சிவகுமார் முன் வர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
சிறைச்சாலைகளில் இந்திய கைதிகளுக்கு சமய போதனைகளை போதிப்பதற்கு கூடுதல் ஆசிரியர்கள் தேவை படுவதையும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் எடுத்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

