
செனாவாங், மே 24 –
தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வெறும் வாக்குறுதிகளை நம்பி இந்திய சமுதாயம் இனியும் ஏமாறக் கூடாது என்றும், செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் மதிப்பிட வேண்டும் என்றும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
செனாவாங்கில் நடைபெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பச்சபா கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அண்மையில் பிகேஆர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கிய ரஃபிசி ரம்லியின் அரசியல் மாற்றத்தையும் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக பிகேஆர் கட்சியை சிறந்த அரசியல் தளமாகக் கூறியவர், கட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்போது புதிய கட்சியைத் தொடங்கி ஆதரவு கோரி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமுதாயம் இதுபோன்ற அரசியல் சூழ்நிலைகளை விழிப்புணர்வுடன் அணுக வேண்டும் என்றும், எந்தவொரு வாக்குறுதியையும் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளாமல், அதன் செயல்பாட்டு அடிப்படையிலேயே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
அரசியலில் நம்பிக்கை மிகவும் முக்கியம் எனக் கூறிய அவர், மஇகாவும் மலேசிய மக்கள் சக்தி கட்சியும் இந்திய சமூக நலனை முன்னிறுத்தி இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சமூக நலனே முக்கியம் என்பதால் ஒற்றுமையுடன் செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்திய சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக மஇகா மற்றும் மக்கள் சக்தி கட்சிகள் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

