
கோலாலம்பூர், மே 24 – நாட்டின் மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு, கோலாலம்பூரிலிருந்து லண்டன் வரை மோட்டார் சைக்கிளில் சாகசப் பயணம் மேற்கொள்ளும் மலேசிய தமிழரான டத்தோ ஆனந்தன் இன்று தனது “MERDEKA RIDE – 2026” பயணத்தை உற்சாகமாகத் தொடங்கினார்.
இந்த மாபெரும் முயற்சியின் மூலம், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் சுமார் 24,700 கிலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களுக்குள் கடந்து, 25 நாடுகள் வழியாக பயணிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தாய்லாந்து, லாவோஸ், சீனா, கசகஸ்தான், ஜியார்ஜியா, துருக்கி, பல்கேரியா, ருமேனியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை கடந்து இந்தப் பயணம் நடைபெற உள்ளது.

இது வெறும் நகரப் பாதைப் பயணம் மட்டுமல்லாமல், மண் சாலைகள், காட்டு வழிகள், ஆற்றுப் பகுதிகள் மற்றும் சேறு நிறைந்த கடினமான பாதைகளையும் உள்ளடக்கிய சவாலான பயணமாக அமைகிறது.
இடது முழங்காலில் காயம் இருந்தபோதிலும், தனது மன உறுதியை இழக்காமல் டத்தோ ஆனந்தன் இந்த சாகசப் பயணத்தை தொடங்கியிருப்பது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி மெர்டேக்கா தினத்தன்று லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதே அவரது முக்கிய இலக்காகும்.
“SHADOWFOX” மோட்டார் சைக்கிள் சாகசக் குழுவின் தலைவராக இருக்கும் டத்தோ ஆனந்தன், இதற்கு முன்பும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல சாகசப் பயணங்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.
கொரோனா காலத்திற்கு பிந்தைய அவரது மூன்றாவது மிகப்பெரிய சாகச முயற்சியாக இந்த லண்டன் பயணம் கருதப்படுகிறது.
இந்த பயணத்தை மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் செனட்டர் டத்தோ சி. சிவராசா, மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல். சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மேலும், நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான மோட்டார் சைக்கிள் சாகச வீரர்கள் கலந்து கொண்டு டத்தோ ஆனந்தனுக்கு உற்சாகமான வழியனுப்பலை வழங்கினர்.

