நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023 பட்ஜெட் மிகவும் ஏமாற்றமளிப்பதால்
இந்திய சமூகம் கோபமும் ஏமாற்றமும் அடைந்துள்ளது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளிகளை பராமரிக்கும் நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவை நிதி அமைச்சர் தெங்கு ஷப்ரூல் குறிப்பாக அறிவிக்கவில்லை.
அதாவது, மீண்டும் தமிழ்ப்பள்ளிகள் இந்த அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
2021ஆம் ஆண்டுக்கு முன், தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் 5 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தத் தொகை அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும், குறிப்பாக மோசமான நிலையில் உள்ள பள்ளிகளுக்கும் உதவியது.
ஆனால், 2021 பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் 3 கோடி வெள்ளி குறைக்கப்பட்டது.
2022 பட்ஜெட்டில், தமிழ்ப்பள்ளிகளுகான ஒதுக்கீடு 2 கோடி வெள்ளி குறைக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழ்ப் பள்ளிகள் ஐந்து கோடி வெள்ளியை இழந்தது.
இப்போது 2023 பட்ஜெட்டில் தேசியப் பள்ளிகள், சீன, தமிழ்ப் பள்ளிகள் மற்றும் மதப் பள்ளிகள் உட்பட பள்ளி பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்காக 110 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் எத்தனை கோடி வெள்ளி தமிழ் பள்ளிகளுக்கு என்று அறிவிக்கப்படவில்லை.
தமிழ்ப்பள்ளிகளை பராமரிக்கும் நோக்கத்திற்காக குறைந்தபட்சம் 5 கோடி வெள்ளியை ஒதுக்குமாறு மஇகா இன்று அரசை வற்புறுத்தத் தவறிவிட்டது என்று சிவகுமார் சாடியுள்ளார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு ஐந்து கோடி வெள்ளியை பெற்று தருவதில் ம இகா மீண்டும் கோட்டை விட்டிருப்பதாக அவர் சாடினார்.