



மஞ்சோங், ஜூன் 2 –
கவியரசு கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல; தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வாழ்வியலை மக்களிடம் கொண்டு சென்ற மாபெரும் படைப்பாளி என கண்ணதாசன் விழாவில் உரையாற்றிய பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் சித்தியவான் அருள்நிலையம் மற்றும் சித்தியவான் சித்தர் குடில் ஆன்மீக இல்லத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற “காலத்தை வென்ற கவிஞன் கவியரசு கண்ணதாசன்” என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர், எழுத்தாளர் சு. வேணுகோபால் சிறப்பு இலக்கிய உரையாற்றினார்.
காதல், துயரம், நம்பிக்கை, ஆன்மிகம் உள்ளிட்ட மனித உணர்வுகளை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் வெளிப்படுத்தியவர் கண்ணதாசன் என்றும், அவரது திரைப்படப் பாடல்கள் அரை நூற்றாண்டைக் கடந்தும் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தத்துவங்களை எளிமையான பாடல் வரிகளாக மாற்றிய பெருமை அவருக்கே உரியது எனவும் அவர் புகழ்ந்தார்.
முன்னதாக இவ்விழாவில் உரையாற்றிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மேனாள் விரிவுரையாளர் தமிழ்மாறன் பலராம், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கவிதைகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு கண்ணதாசன் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது என தெரிவித்தார். மனிதநேயம் மற்றும் இறைநேயம் ஆகியவற்றை எளிமையாக மக்களிடம் கொண்டு சென்றவர் கண்ணதாசன் எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த மலேசிய இந்துதர்ம மாமன்றம் சித்தியவான் அருள்நிலையம், சித்தியவான் சித்தர் குடில் ஆன்மீக இல்லத்தின் தலைவர் ஆசிரியர் கிருஷ்ணன் சுப்ரமணியத்திற்கு, கலந்து கொண்ட பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
இத்தகைய நிகழ்ச்சிகள் தமிழ்ச் சமூகத்தில் இலக்கிய விழிப்புணர்வை வளர்க்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆசிரியர் கோபால் வெகுச் சிறப்பாக வழிநடத்திய இவ்விழாவில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், ஆலய மற்றும் அருள்நிலையப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட வேளையில்
மஞ்சோங் இராமகிருஷ்ண பஜனைக் குழுவினரின் (முன்னாள் கடற்படை வீரர்கள்) கண்ணதாசன் பாடல்களின் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு அழகு சேர்த்தது.

