
சிரம்பான், ஜூலை 22 –
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வளர்ச்சியும் மக்களின் நலனும் தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டுமெனில், நிலையான அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
சிரம்பானில் உள்ள அம்பாங்கான் உணவக வளாகத்தில் நடைபெற்ற “Santai Petang Bersama Warga Ampangan” நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மக்களின் நலனைக் காக்கவும், நல்லாட்சியை உறுதி செய்யவும் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகக் கூறினார்.

நிர்வாகத்தில் இன்னும் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதை ஒப்புக்கொண்ட அவர், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் மூலம் அந்த குறைபாடுகளைச் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
நமது அரசியல் நிலையாகவும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். மாநிலம் ஒரே நோக்கத்துடன் முன்னேற வேண்டும். முறைகேடுகளைத் தவிர்த்து, மக்களின் நலனே முதன்மை என்ற அடிப்படையில் செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் சிறந்த முடிவை எடுத்து, மாநில வளர்ச்சி திட்டங்கள் கூட்டாட்சி அரசின் கொள்கைகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்தப்படுவதற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
மேலும், இன வேறுபாடின்றி மக்களின் நலனை முன்னிலைப்படுத்தும் நேர்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.
அரசியலில், தனது நீண்டகால அனுபவம், கண்ணியமும் பொறுப்புணர்வும் கொண்ட தலைவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நல்ல மலாய்க்காரர்களும் இருக்கிறார்கள், நல்ல இந்தியர்களும் இருக்கிறார்கள், நல்ல சீனர்களும் இருக்கிறார்கள். கண்ணியமும் நேர்மையும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுங்கள். அப்போது நமது எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், என்றும் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், அம்பாங்கான் சட்டமன்ற தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ முகமட் நஸ்ரி கசிம், சிலாங்கூர் மாநில கெஅடிலான் தேர்தல் குழு இயக்குனரும் உலு சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவருமான டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

