நமது வாக்கை, நமது உரிமைக்கும், எதிர் காலத்திற்கும் பயன் படுத்துவோம், நெகிரியில் பக்காத்தான் ஹரப்பானுக்கு ஆதரவளிப்போம்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மாற்றத்தை தொடர்ந்து முன்னெடுக்க பக்காத்தான் ஹரப்பானுக்கு ஆதரவளிப்போம். நமது வாக்கை, நமது உரிமைகளுக்காகவும், நமது எதிர் காலத்திற்காகவும் பயன்படுத்துமாறு சிலாங்கூர் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை முன்னாள் மத்திய அமைச்சருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜோகூரில் செய்த தவறை மீண்டும் நெகிரி செம்பிலானிலும் செய்வது நாட்டு மக்களின், குறிப்பாக நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு மிக ஆபத்தாக முடியும் என அவர் எச்சரித்தார்.

ஒரு நாட்டின் கொள்கைகள் பொருளாதாரம், கல்வி போன்ற மேம்பாடுகளை முன்நிறுத்தி, நாட்டின் அரசியல் கட்சிகள் இணைந்து செயல்படுவதை வரவேற்கலாம். ஆனால் இனம், சமயம் ஆகியவற்றின் ஒற்றுமையின் அடிபடையில், சிறுபான்மையினரை ஓரங்கட்டுவது, இன வேறுபாடுகளை முன்நிறுத்தி தேர்தலை எதிர்கொள்வது மிக ஆபத்தான அணுகுமுறையாகும். அப்படிப்பட்ட சக்திகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், மலேசியா போன்ற பல இனச் சமூகத்தில் வாழும் மக்களின் எதிர்காலத்திற்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.

நாட்டுக்கு சுதந்திரம் பெற இங்கிலாந்து சென்ற குழுவில் சிறுபான்மையினராக இருந்தாலும் இந்தியர்களும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியதன் முக்கியத்துவத்தை, நாடு சுதந்திரமடைந்து 69 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், நம்மைவிட பெரிய ஏமாளிகள் எவரும் இருக்க முடியாது.

1957-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல், நாடு ஒரே கட்சியின் ஆட்சியில் இருந்ததைக் கண்டோம். நமது உரிமைகள் படிப்படியாக அபகரிக்கப்படுவதையும், நாடும் மக்களும் சுரண்டப்படுவதையும், ஊழல் தலைவிரித்தாடியதையும் கண்ட பின்னர், 2008-ஆம் ஆண்டு பினாங்கு, சிலாங்கூர், பேராக், கெடா போன்ற சில மாநிலங்களில் நீண்ட போராட்டங்களுக்குப் பின், மக்கள் பக்காத்தான் ராயாட்டிடம் மாநில ஆட்சியை ஒப்படைத்தார்கள்.

பக்காத்தான் ஹரப்பானின் ஆற்றல், தூய்மை, நேர்மை மற்றும் திறமையை அங்கீகரிக்கும் வகையில், 2018-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலானிலும், 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை பிரதமராக்கியதன் மூலம், ஒரு பல இனக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பானை நீங்கள் அதிகாரத்தில் அமர்த்தினீர்கள்.

ஆனால், ஆட்சியமைக்கப் போதுமான எம்பிகள் எண்ணிக்கை இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்ததால் மிகப் பலவீனமான பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார் பதவியில் இருக்கிறார். இருப்பினும், குன்றின் மேல் இட்ட விளக்கு போல் திறமையான அவர், நாம் எதிர்பார்த்தபடி தனது மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் ஏழ்மையையும் அந்நியக் கடன்களையும் குறைத்து, ஊழலையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்தி, அந்நிய முதலீட்டையும் தொழிலாளர்களின் ஊதியத்தையும் உயர்த்தி, நம் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புகளையும் உயர்கல்வி, தொழிற்கல்வி வாய்ப்புகளையும் அதிகரித்து, நமது ரிங்கிட்டின் மதிப்பையும் நாட்டின் கௌரவத்தையும் மீட்டெடுத்து, இவ் வட்டாரத்தில் மலேசியாவை மிளிர வைத்துள்ளார்.

இதற்கு முன், 2018-க்கும் 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல், பாஸ், பெர்சத்து மற்றும் அம்னோ ஆகிய கட்சிகளின் கூட்டணிகள் மாறி- மாறி ஆட்சி அமைத்து, மூன்று பிரதமர்களின் ஆட்சி நடைபெற்றது.

அந்தக் காலகட்டத்தில் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டது. வேலை இல்லாதோரின் எண்ணிக்கை உயர்ந்தது. அந்நிய முதலீடுகள் வெளியேறின. நமது ரிங்கிட்டின் மதிப்பு வெகுவாகச் சரிந்தது. அது மட்டுமல்லாமல், கோழி இறைச்சி, அரிசி, முட்டை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது.

மக்களை உணவுக்காக வெள்ளைக்கொடி ஏந்த வைத்தார்கள். கோவிட் தொற்றுநோயைக் காரணம் காட்டி, ஈ.பி.எஃப். போன்ற மக்களின் நீண்டகாலச் சேமிப்புகளைப் பயன்படுத்தி ரஹ்மா உதவித்தொகை வழங்கினார்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது.

இப்போது, மத்திய கிழக்குப் போரின் காரணமாக உலகம் கோவிட் தொற்று நோய்க் காலத்தைப் போன்ற ஒரு இக்கட்டான பொருளாதாரச் சூழலில் உள்ளது. ஆனால் நாட்டில் எவரும் உணவுக்காக வெள்ளைக்கொடி தூங்குவதில்லை. எரிபொருள் விலை உயர்வின் சுமையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. ரஹ்மா ரொக்க உதவி மட்டுமல்லாமல், சாரா உதவி, பள்ளி மாணவர்களுக்கான உதவி, மருத்துவ உதவி, மேம்படுத்தப்பட்ட சமூக நலத்திட்ட உதவிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகள், தொழில் வளர்ச்சி நிதி உதவி, இந்தியப் பெண்களுக்கான வணிகக் கடன் உதவித் திட்டம், அதிகரிக்கப்பட்ட மித்ரா உதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதற்கு நாட்டின் எந்த பொது அல்லது நீண்டக்கால நிதித் திட்டங்களையும் பணயம் வைக்கவில்லை.

மேலும், மூன்று பிரதமர்களின் ஆட்சி காலத்தில் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்த மூன்று தமிழ்ப்பள்ளிகள் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டு, ஹரப்பான் ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேபோன்று, பல தோட்டங்களில் ஆண்டாண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் டிங்கிள் காலவே, மிடிங்லீ, பிராங் பெசார் மற்றும் சிஜிட்லி தோட்டத் தொழிலாளர்களுக்குப் பூர்த்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கடந்த 30 ஆண்டுகளாகக் கவனிக்கப்படாமல் இருந்த லாடாங் நைகல் காட்டன் சுற்றுவட்டாரத்தில் வாழும் சுமார் 245 முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரிமா வீட்டுவசதித் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தும் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களுக்கான அளவுகோலாகும். நெகிரி செம்பிலானில் இந்த ஆட்சிக்கு வழங்கும் ஆதரவு, மத்திய அரசின் கரங்களை வலுப்படுத்தும், சமுதாயத்தின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேறவும், மக்கள் பயன்பெற உதவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles