
கோலாலம்பூர், ஜூன் 3-
1969ஆம் ஆண்டின் பணியாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ் உள்ள ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள், பணி தொடர்பு இல்லாத விபத்துகளிலிருந்து இன்று முதல் தானாகவே முழுமையான பாதுகாப்பைப் பெறுவர்.
1969 ஆம் ஆண்டின் பணியாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட லிண்டுங் 24 மணிநேரத் திட்டம் (LINDUNG 24 Jam), பொது விடுமுறை நாட்கள் உட்பட மலேசியாவில் மிகவும் விரிவான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வழங்குகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
“சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (PERKESO) கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டம், தற்போதைய அனைத்து முறைசார் தொழிலாளர்களுக்கும் தானாகவே பொருந்தும். இதற்காக முதலாளிகளோ அல்லது தொழிலாளர்களோ புதிதாக எந்தப் பதிவும் செய்ய வேண்டியதில்லை.
“ஜூன் 1, 2026-க்குப் பிறகு புதிதாக வேலையில் சேருபவர்களை, தற்போதைய நடைமுறைகபடி முதலாளிகள் பெர்கேசோ (Perkeso) அமைப்பின் மூலம் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்,” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
லிண்டுங் 24 மணிநேரத் திட்டத்திற்கான சந்தாத் தொகையை முழுமையாகத் தொழிலாளர்களே ஏற்பர் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டங்களின் படி இது படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும் ரமணன் கூறினார். இச்சந்தா செலுத்துவதற்கான உச்சவரம்பு சம்பளம் ரிங்கிட் 6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்டமாக, இத்திட்டத்திற்கான சந்தா விகிதம் மாதாந்திர சம்பளத்தில் 0.75 சதவீதமாக இருக்கும். எனவே, தொழிலாளர்களின் சம்பளத்தில் இத்தொகையைப் பிடித்து, பெர்கேசோவுக்கு மாதந்தோறும் செலுத்துவது முதலாளிகளின் பொறுப்பாகும் என்று அமைச்சர் விளக்கினார்.
தடையற்ற பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இதனை எளிதாகப் பின்பற்றுவதற்கும் சந்தா செலுத்தும் நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

