
கோலாலம்பூர், ஜூலை 2-
டிரெய்னோகேட் மலேசியா மற்றும் சிலாங்கூர் யூத் கம்யூனிட்டி (SAY) இணைந்து ஏற்பாடு செய்த Trainocate AI Training என்ற சமூக அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சித் திட்டம், கடந்த ஜூன் 6 முதல் கோலாலம்பூரிலுள்ள KL Eco City-யில் நடைபெற்றது.
எதிர்கால டிஜிட்டல் திறன்களையும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான அடிப்படை அறிவையும் இளைஞர்களுக்கு வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில், மொத்தம் 120 பேர் பங்கேற்றனர். அவர்களில் மலேசியா ஸ்ரீ சாரதா தேவி இல்ல நலச்சங்கத்தைச் சேர்ந்த 28 மாணவர்களும் இடம் பெற்றிருந்தனர்.

இந்த 28 மாணவர்களும் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது, அவர்களின் கற்றலுக்கான அர்ப்பணிப்பையும், தனிநபர் முன்னேற்றத்திற்கான உறுதியையும் வெளிப்படுத்துகிறது. தரமான கல்வி, திறன் மேம்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சி மூலம் பின்தங்கிய குழந்தைகளை முன்னேற்றும் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் பணியில் இது மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களை கௌரவிக்கும் வகையில், Trainocate Career Jumpstart 30th Celebration & Graduation Hi-Tea நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் தேதி சன்வே ரிசார்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில இளவரசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும், Trainocate Group Holdings (ஜப்பான்), Trainocate Malaysia மற்றும் Selangor Youth Community (SAY) ஆகியவற்றின் நிர்வாகக் குழுவினரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தைச் சேர்ந்த 28 மாணவர்களும் தங்களது பயிற்சி நிறைவு சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டதோடு, இல்லத்தை சேர்ந்த சுசிதாரா ஜெகன் இந்நிகழ்ச்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக (Emcee) பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தினார்.
அதேவேளை, சாருமதி சண்முகம், டிரெய்னோகேட் AI பயிற்சித் திட்டத்தில் பெற்ற அனுபவங்கள் மற்றும் கற்றல் பயணத்தைப் பற்றி, சிலாங்கூர் மாநில இளவரசர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

இருவரின் தன்னம்பிக்கை, பேச்சுத்திறன் மற்றும் தொழில்முறை அணுகுமுறை ஆகியவை, ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தில் வழங்கப்படும் ஒழுக்கம், கல்வி மற்றும் ஆளுமை வளர்ப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்று பட்டதாரி மாணவர்களை ஊக்குவித்த சிலாங்கூர் மாநில இளவரசருக்கு ஸ்ரீ சாரதா தேவி இல்ல நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.

அதேபோல், இளைஞர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் திறன் பயிற்சிகளை வழங்கிய Trainocate Malaysia, Trainocate Group Holdings (Japan), மற்றும் Selangor Youth Community (SAY) ஆகிய அமைப்புகளுக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு ஸ்ரீ சாரதா தேவி இல்ல நிர்வாகம் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொண்டது.

