
ஜெராம் படாங், ஜூலை 19–
நெகிரி செம்பிலான், ஜெராம் படாங் தொகுதியில் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே பக்காத்தான் ஹராப்பானின் முக்கிய இலக்காகும் என்று அத்தொகுதியின் வேட்பாளர் மணிவண்ணன் கோவின் தெரிவித்தார்.
ஜெராம் படாங் புதிய முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்ட பகுதியாக உள்ளது. எனவே மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து புதிய முதலீடுகளை கொண்டு வந்து, உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME), உள்ளூர் தொழில்முனைவோருக்கு பயிற்சி, நிதியுதவி, சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும். இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET), NIOSH மூலம் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள், டிஜிட்டல் திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் திறன் வளர்ப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் Desa MAHA திட்டங்களின் மூலம் நவீன வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பண்ணை நிர்வாகம் மற்றும் கிராமப்புற பொருட்களின் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெற்று புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்கால பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட, போட்டித்திறன் மிக்க மனிதவளத்தை உருவாக்குவதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.
உண்மையான வளர்ச்சி என்பது கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல. மக்களுக்கு நிலையான வேலை, உயர்ந்த வருமானம் மற்றும் தரமான வாழ்க்கையை வழங்குவதே தனது உறுதிப்பாடு என்று மணிவண்ணன் தெரிவித்தார்.

