மடானி அரசுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, இனவாத அரசியல் அதிகரிப்பு – மார்ட்டின் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 19-

மடானி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சமூக ஊடகங்களில் இனவாத கருத்துகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரித்துள்ளதாக எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான மார்ட்டின் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட கருத்துக் கட்டுரையில், தற்போதைய அரசாங்கம் அனைத்து இனங்கள், மதங்களை, பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், அதனை எதிர்க்கும் தரப்பினர் இன, மத உணர்வுகளைத் தூண்டும் அரசியலை தீவிரமாக பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இணையப் பிரச்சாரக் குழுக்கள், சமூக ஊடக செல்வாக்காளர்கள் மற்றும் இணையப் படைகள் (Cybertroopers) திட்டமிட்டு இனவாதம், வெறுப்பு மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதன் மூலம் பொதுமக்களிடையே அச்சம் மற்றும் வெறுப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, மலாய்–முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அண்மையில் கூறியதையும், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முஸ்லிம் அல்லாதவர்களை குறிவைத்து முன்பு பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதையும் அவர்
சுட்டிக்காட்டினார்.

அதேபோல், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடினும் மலாய்–முஸ்லிம் வாக்காளர்களை இன அடிப்படையில் வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) வெளியிட்ட தகவலின்படி, 2022 ஜனவரி முதல் 2026 மே மாதம் வரை இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 13,795 இணையப் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக தளங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதில், 8,628 பதிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

அவற்றில் 8,159 பதிவுகள் இனம் தொடர்பானவை, 4,139 பதிவுகள் மதம் தொடர்பானவை மற்றும் 1,497 பதிவுகள் அரச குடும்பம் தொடர்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் இதுபோன்ற பதிவுகள் தொடர்பாக வெறும் 197 நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 7,648 ஆக உயர்ந்திருப்பது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டில் ரோஹிங்கியா பிரச்சினை, மத உணர்வுகள் மற்றும் இனம், மதம், அரச குடும்பம் தொடர்பான விவகாரங்களில் சமூக ஊடகங்களில் ஒருங்கிணைந்த போலி பிரச்சாரங்கள் (Coordinated Inauthentic Behaviour) இடம்பெற்றிருக்கலாம் என MCMC தெரிவித்துள்ளது.

தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், Malaysia Racism Report 2025 வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இனவாதக் கருத்துகள் குறித்து கவலை தெரிவித்தார்.

குறிப்பாக, அறிக்கையில் பதிவான நாடாளுமன்றம் தொடர்பான இனவாதச் சம்பவங்களில் சுமார் 80 விழுக்காடு எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்டாலும், இது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டிய பிரச்சினை என்றும் மார்டின் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles