சிரம்பான் ஜெயாவில் இளைஞர், மகளிர் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை!

பக்காத்தான் வேட்பாளர் சு.முகுந்தன் உறுதி!

சிரம்பான், ஜூலை 20 –
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் எண் 3-இல் போட்டியிடும் வேட்பாளர் சு.முகுந்தன், வெற்றி பெற்றால் இளைஞர்கள், மகளிர் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.

“நான் இந்த மண்ணின் மைந்தன். கடந்த 14 ஆண்டுகளாக அரசியலில் மக்களுக்காக சேவை செய்து வருகிறேன். மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்துள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு முதல் ஜசெகாவில் இணைந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், 2012 முதல் 2018 வரை கம்போங் பாசிர் பகுதி மக்களின் பிரச்சினைகளை ரஹாங் சட்டமன்றம் மற்றும் ராசா நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று பல தீர்வுகளைப் பெற்றுத் தந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், 2019ஆம் ஆண்டு சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரனின் சிறப்பு அதிகாரியாகவும், 2022ஆம் ஆண்டு துணை கவுன்சிலராகவும் பணியாற்றிய அனுபவம் தமக்கு இருப்பதாக தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும், மக்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கும் சேவைகளையும் முன்னெடுத்ததாகவும், வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், பாலடைந்த நிலையில் வசித்து வந்த ஐந்து குடும்பங்களின் வீடுகளைச் சீரமைப்பதற்காக மாநில அரசின் நிதி உதவியை பெற்றுத் தந்ததாகவும், தீபாவளி சந்தைகளை ஏற்பாடு செய்து சிறு வியாபாரிகளுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றால், இளைஞர்களுக்கு TVET தொழில்திறன் பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்தி வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதோடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள், மகளிருக்கு தொழில்திறன் பயிற்சிகள், அரசு உதவித் திட்டங்களைப் பெற்றுத் தருதல் உள்ளிட்ட முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

“மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காண்பேன். அரசு துறைகளுடன் நேரடியாக இணைந்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன்,” என்று சு.முகந்தன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles