

முடி திருத்தும் துறை, ஜவுளி துறை மற்றும் நகைக்கடை துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களின் தற்காலிக வேலை பெர்மிட் புதுப்பிப்பது முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இந்த மூன்று துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்களை தருவிப்பது முடக்கப்பட்ட நிலையில் அதிகமான இந்திய வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
தற்போது அவர்களிடம் இருக்கும் தொழிலாளர்களின் தற்காலிக வேலை பெர்மிட் புதுப்பிக்கும் வழிமுறையும் நிறுத்தப்படும் என்ற உள்துறை அமைச்சின் தகவல் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று பினாங்கு மாநிலத்தில் மனித மூலதன மாநாட்டைத் தொடக்கி வைத்த மனித வள அமைச்சர் வ சிவகுமாரிடம் பினாங்கு மாநில இந்தியர் சிகை அலங்காரிப்பு சங்கத்தின் தலைவர் புவனேஸ்வரன் தலைமையில் மகஜர் வழங்கப்பட்டது.
அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த முடக்கத்தை அகற்றும் படி அவர்கள் மனித வள அமைச்சர் சிவகுமாரை கேட்டுக் கொண்டனர்.
கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
ஆகவே விரைந்து இந்த முடக்கத்தை ஒற்றுமை அரசாங்கம் அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

