

பத்துகாஜா,ஆக28: விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்குகானது அல்ல.அது ஒரு தலைமுறை ஆரோக்கியத்தோடும் வளத்தோடு உயிர்பெற செய்யும் மூலதனம் என குறிப்பிட்ட பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் விளையாட்டு மூலம் இளையோரை மேம்படுத்தும் செயல்பாட்டை நாம் வழக்கப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.
இன்றைய இளையோரை ஆரோக்கியமான சூழலில் பயணிக்க வைக்க வேண்டிய கடமை நாம் அனைவருக்கும் உண்டு என விவரித்த அவர் அது விளையாட்டு வாயிலாக மேம்படுத்தப்படவும் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
பத்துகாஜா இ.சி. பூப்பந்து அரங்கில் கே.ஆர்.டி ஏற்பாட்டில் நடைபெற்ற பூப்பந்து போட்டியினைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் சிவகுமார் இதனை வலியுறுத்தினார்.
விளையாட்டு என்பது ஆரோக்கியமான வாழ்வியலை மட்டுமின்றி பல்லின மக்களின் ஒற்றுமை,ஒருமைப்பாடு,புரிந்துணர்வோடு சுயஒழுக்கம்,கட்டுப்பாடு என வாழ்வியலுக்கான அத்துணை மேம்பாட்டையும் வாழ்வியல் நெறியையும் மெய்ப்பிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது என்றார்.
அதுமட்டுமின்றி,இம்மாதிரியான விளையாட்டுகள் குழுவாய் ஒன்றிணைந்து வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தையும் சமூகமாய் முன்னெறுவதற்காக தத்துவத்தையும் நமக்குள் வளர்த்தெடுப்பதாகவும் கூறிய அவர் இதுபோன்ற விளையாட்டுக்கள் இன்னும் அதிகமாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அதற்காக தாம் தொடர்ந்து அதரவும் நிதியுதவியும் செய்யவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதே வேளையில்,கைபேசியிலும் சமூக ஊடகங்களிலும் தங்களின் நேரத்தை வீணடிக்கும் இளயோர் வர்க்கம் விளையாட்டிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் விளையாட்டுத்துறையில் நம் இந்தியர்கள் கொடி கட்டி பறந்த வரலாறுகள் மீண்டும் திரும்ப வேண்டும் எனவும் நினைவுறுத்திய டாக்டர் சிவகுமார் பூப்பந்து துறையில் மீண்டும் நாம் கால் பதிக்க அத்துறை மீது நம் கவனம் மேலோங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்பந்து போட்டியினைத் தொடக்கி வைத்ததோடு இந்நிகழ்ச்சிக்காக வெ.5000 மானியமாகவும் மாண்புமிகு சிவகுமார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஏற்பாட்டுக்குழுவினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

