
கோலாலம்பூர், ஆக 7-
நாடு முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆறாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்ற TAMIL2026 தேசியத் தமிழ் பொதுப் பேச்சுப் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகள், மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன், மலாயா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றன.
Malaysia Innovation Invention Creativity Association (MIICA) ஏற்பாடு செய்த இப்போட்டியில், ஆரம்பக்கட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 100 மாணவர்கள் அரையிறுதிச் சுற்றில் பங்கேற்றனர். அவர்களில் சிறந்த 10 மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியில், சிலாங்கூர் SJKT Sungai Renggam பள்ளியைச் சேர்ந்த காவியஸ்ரீ முருகன் (Kaaviyasree Murugan) முதலிடத்தை வென்று RM2,000 ரொக்கப் பரிசைப் பெற்றார்.
பேராக் SJKT Ladang Batak Rabit பள்ளியைச் சேர்ந்த ஜெயா ஜொனாதன் மகேஷ் (Jaya Johnathan Mahesh) இரண்டாவது இடத்தை வென்று RM1,500 ரொக்கப் பரிசையும், பேராக் SJKT Menglembu பள்ளியைச் சேர்ந்த மதன்ராஜ் ரமேஷ் (Mathenraj Ramesh) மூன்றாவது இடத்தை வென்று RM1,000 ரொக்கப் பரிசையும் பெற்றனர்.
TAMIL2026, நாடு முழுவதிலும் உள்ள ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட தேசிய அளவிலான தமிழ்ப் பொதுப் பேச்சுப் போட்டியாகும்.
மாணவர்களின் தமிழ்ப் பேச்சாற்றல், தன்னம்பிக்கை, சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் மேடை ஆளுமையை வளர்ப்பதுடன், இளம் தலைமுறையினர் தமிழில் சிந்தித்து தங்கள் கருத்துகளைத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான ஒரு தேசிய தளத்தை உருவாக்குவதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை இந்நிகழ்ச்சிக்கு வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும், TAMIL2026 தேசிய அளவில் சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கிய பங்காற்றியது.

