

கோலாலம்பூர், செப் 10-– மனிதவள அமைச்சு (KESUMA) கீழ் செயல்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (MITRA), மனித மூலதனம், B40/M40 பொருளாதார மேம்பாடு மற்றும் இந்திய சமூகத்தின் சமூக-ஆன்மிக வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் மொத்தம் RM59.76 மில்லியன் மதிப்பிலான ஏழு (7) புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
இத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை, இன்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான Uyarvu MADANI மானியங்கள் வழங்கும் நிகழ்வுத் தொடர் 2 நிகழ்ச்சியை யொட்டி, மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ இரமணன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த விரிவான திட்டத் தொகுப்பு, MADANI அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.
இதன் மூலம் போட்டித்திறனை மேம்படுத்துதல், டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல் மற்றும் அடிமட்ட அளவில் மலேசிய இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலையை தொடர்ச்சியாக வலுப்படுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
தொழில்முனைவோர் முயற்சிகளின் கீழ், Uyarvu MADANI 2.0 திட்டம் மேம்படுத்தப்பட்டு, மொத்தம் RM50 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கூடுதலாக RM25 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு துறைகளில் செயல்படும் B40 மற்றும் M40 பிரிவைச் சேர்ந்த 1,400 நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (PMKS) ஆதரவு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 14 செப்டம்பர் முதல் 13 அக்டோபர் 2026 வரை திறந்திருக்கும்.
உயர்கல்விக்கான உதவிகள்
உயர்கல்வி நிலையில், MITRA Program Peranti MADANI திட்டத்தின் கீழ் RM13.25 மில்லியன் ஒதுக்கி, முதல் ஆண்டு பயிலும் 5,000 B40 மற்றும் M40 மாணவர்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட டிஜிட்டல் சாதனங்களை வழங்கவுள்ளது.
அதேவேளை, RM10.0 மில்லியன் மதிப்பிலான Program Bantuan Khas Siswa MADANI திட்டத்தின் மூலம், 5,000 B40 மாணவர்களுக்கு தலா RM2,000 நிதியுதவி வழங்கப்பட்டு, அவர்களின் குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்க உதவவுள்ளது.
இந்த இரண்டு உயர்கல்வித் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் 14 செப்டம்பர் முதல் 31 அக்டோபர் 2026 வரை திறந்திருக்கும்.
SJKT மற்றும் தமிழ் கல்விக்கான உதவிகள்
தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்விக்காக, Inisiatif Peralatan ICT (Smart Board) SJKT 2026 திட்டம் தொடரப்படுகிறது. இதற்காக RM5.36 மில்லியன் ஒதுக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள 358 SJKT பள்ளிகளுக்கு 400 Smart Board சாதனங்கள் வழங்கப்படவுள்ளன.
அதே நேரத்தில், கல்வி அமைச்சுடன் (KPM) இணைந்து RM900,680 ஒதுக்கீட்டில் SPM மற்றும் STPM தமிழ் மொழி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் 8,690 மாணவர்கள் பயனடைவார்கள்.
சமூக நல்லிணக்கம் மற்றும் ஆன்மிக வளர்ச்சி
சமூக நல்லிணக்கம் மற்றும் சமூகத்தின் ஆன்மிக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், RM5.0 மில்லியன் மதிப்பிலான HARMONI MADANI திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ், இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குருத்வாரா மற்றும் தேவாலயத்திற்கும் RM20,000 வரை நிதி வழங்கப்படவுள்ளது.
அதிகபட்சமாக 250 வழிபாட்டுத் தலங்கள் கற்றல் மையங்களாகவும் சமூக நடவடிக்கைகளுக்கான மையங்களாகவும் பயன்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விண்ணப்பங்கள் 14 செப்டம்பர் முதல் 13 அக்டோபர் 2026 வரை திறந்திருக்கும்.
மேலும், RM250,000 மதிப்பிலான குற்றத் தடுப்பு திட்டம், மலேசிய குற்றத் தடுப்பு அறக்கட்டளை (MCPF) உடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் மலாக்காவில் உள்ள SJKT பள்ளிகளைச் சேர்ந்த 700 மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பது நோக்கமாகும்.
இந்த அனைத்து புதிய முயற்சிகளும் சமூக-பொருளாதாரம், கல்வி மற்றும் ஆன்மிகத் துறைகளில் உள்ள இடைவெளிகளைக் குறைத்து, B40 மற்றும் M40 சமூகத்தினர் நாட்டின் முன்னேற்றப் பாதையில் முழுமையாக உள்ளடக்கப்படுவதை உறுதி செய்வதற்கான MADANI அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.
உதவிகள் திறம்படவும் நியாயமாகவும் சென்றடைவதை உறுதி செய்ய, KESUMA மற்றும் MITRA ஆகியவை கடுமையான நிர்வாக நடைமுறைகள் மற்றும் வெளிப்படையான தேர்வுச் செயல் முறைகளுக்கு முன்னுரிமை அளித்து, KPM மற்றும் MCPF போன்ற அரசாங்க நிறுவனங்களுடன் மூலோபாய ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன என்று அவர் சொன்னார்

