மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு

புதுடெல்லி: செப்.12-
மலேசியா – இந்தியா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாட்டு வர்த்தகச் சமூகங்களை நேரடியாக இணைக்கும் புதிய கூட்டாண்மைத் தளத்தை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனிடம் ஒப்படைக்க மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இங்கு நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற உயர்மட்ட இருதரப்புச் சந்திப்பின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியத் தூதுக்குழுவில் முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனியோடு, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனும் பங்கேற்றார்.

இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வலையமைப்புகளை விரிவாக்குவதோடு, புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் திறம்பட உருவாக்குவதே இக்கூட்டாண்மையின் முதன்மை நோக்கமாகும்.

இத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று செயலாக்கும் பொறுப்பு அமைச்சர் ரமணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டாண்மை வெறும் ஏட்டளவில் இல்லாமல் மலேசிய மக்களுக்கு நேரடி நன்மைகளைத் தரும் வகையில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இப்பொறுப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் ரமணன், பொருளாதார ராஜதந்திரத்தின் உண்மையான வெற்றி என்பது வெறும் முதலீட்டு எண்களில் மட்டுமல்லாமல், நாட்டிற்குள் தரமான வேலைவாய்ப்புகளையும் உயர்த்தப்பட்ட வருமானத்தையும் கொண்டு வருவதிலேயே அடங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டாண்மை மூலம் நாட்டிற்குள் கொண்டுவரப்படும் ஒவ்வொரு முதலீடும் உள்ளூர் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்கும், உயர்மதிப்புமிக்கப் பணிகளுக்கும் வழிவகுப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

குறிப்பாக, தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், செமிகண்டக்டர், தொழில்முறை சேவைகள் மற்றும் நவீன உற்பத்தித் துறை போன்ற உயர்மதிப்புமிக்கத் துறைகளில் இந்தியா கொண்டுள்ள உலகத்தரம் வாய்ந்த வலிமையைப் பயன்படுத்தி, மலேசியப் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புச் சந்தைக்கும் புதிய கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியப் பொருளாதார வளர்ச்சியை மலேசியர்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கான வாய்ப்புகளாக மாற்றுவதே மனிதவள அமைச்சின் முதன்மை இலக்கு என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles