அரசியல் வேறுபடலாம், மக்களின் உரிமை வேறுபடக்கூடாது: எதிர்க்கட்சி மாநிலங்களுக்கும் உதவி தொடரும் என அமைச்சர் ரமணன் உறுதி

கோலாலம்பூர், செப்.12-
அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் மக்களுக்குச் சேவை செய்வதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கில், எதிர்க்கட்சிகள் நிர்வகிக்கும் மாநிலங்களுக்கும் உதவி வழங்குவதில் மடாணி அரசாங்கம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக மக்கள் நீதி கட்சியின் (பி.கே.ஆர்) உதவித் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்துவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்டு வரும் நடைமுறை அணுகுமுறை, அரசியல் வேறுபாடுகளை விடவும் மக்களின் நலனுக்கே உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை மெய்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கிளந்தான் மாநில மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, அம்மாநில அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை மத்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என பிரதமர் அன்வார் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அமைச்சர் ரமணன் இந்த அறிக்கையை நேற்று விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றிப் பணியாற்றுவதே ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமையாகும் எனக் கூறிய அவர், ஆட்சிப் பொறுப்பில் யார் இருந்தாலும் மலேசியக் குடிமக்கள் அனைவரும் சமமாகவே கருதப்படுகிறார்கள் என்று வலியுறுத்தினார்.

எந்தவொரு மாநிலம் எதிர்க்கட்சியால் நிர்வகிக்கப்பட்டாலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என்று வரும்போது பேச்சுவார்த்தைக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் அன்வார் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த முற்போக்கான அணுகுமுறையின் வெளிப்பாடாகவே, மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் தடையின்றி நிறைவேற மத்திய அரசு வழங்கும் மாதாந்திர நிதியுதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, குடிநீர் விநியோகம், வெள்ளப் பெருக்குத் தடுப்பு திட்டங்கள், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற நேரடிச் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகாண மத்திய-மாநில அரசுகளின் இணக்கமான கூட்டுறவு மிகவும் அவசியமாகும்.

அரசியல்வாதிகளின் முடிவற்ற சர்ச்சைகளை மக்கள் விரும்பவில்லை என்றும், தங்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு நடைமுறைப் பூர்வமான தீர்வுகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் அமைச்சர் ரமணன் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் களத்தில் போட்டியிட்டாலும், தேசத்தின் நலன் என்று வரும்போது ஒரே மேஜையில் அமர்ந்து பேசுவதே முதிர்ச்சியடைந்த அரசியலாகும் எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் சண்டைகளில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதில் அரசாங்கத்தின் மாண்பு அளவிடப்படுவதில்லை, மாறாக மக்களின் எத்தனை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது என்பதிலேயே அதன் வெற்றி அடங்கியுள்ளது என்றும், இதில் மக்களே இறுதியில் வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles