மலேசியா–இந்திய வர்த்தக சமூகங்களை இணைக்கும் தளத்தை உருவாக்கும் பணிக்கு டத்தோஸ்ரீ இரமணன் பொறுப்பு!

புதுடில்லி, ஆக 12
மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இரமணன், மலேசியா மற்றும் இந்தியாவின் வர்த்தக சமூகங்களை இணைக்கும் வகையில் சிறப்பு தளம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இன்று புதுடூல்லியில் நடத்திய இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தக வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டத்தோஸ்ரீ இரமணன் கூறுகையில், இந்தத் தளத்தின் முக்கிய நோக்கம் மூலோபாய ஒத்துழைப்பை நடைமுறைச் செயல்பாடுகளாக மாற்றுவதாகும். குறிப்பாக, தரமான முதலீடுகளை ஈர்ப்பதுடன், உள்ளூர் மக்களுக்கு அதிக மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றார்.

“இந்தத் தளம் இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களை இணைப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படவில்லை.

“ஒவ்வொரு ஒத்துழைப்பும் முதலீடும் இறுதியில் மலேசிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வருமானம் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்று அவர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தார்.

இந்த முக்கியமான நடவடிக்கை, அதிக மதிப்புமிக்க துறைகளில் இந்தியாவிடம் உள்ள மிகப்பெரிய ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

“தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், குறைக்கடத்திகள், தொழில்முறை சேவைகள் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட அதிக மதிப்புமிக்க துறைகளில் இந்தியா வலுவான திறனைக் கொண்டுள்ளது. இத்துறைகள் மலேசியாவுடன் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன,” என்றார் டத்தோஸ்ரீ இரமணன்.

மலேசியா BRICS-ன் 18ஆவது தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்குதாரர் நாடாக பங்கேற்கும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அன்வார் இப்ராஹிம் இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள பணிப் பயணத்தில் ரமணனும் இணைந்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான மூலோபாய கூட்டாண்மையை (Comprehensive Strategic Partnership) மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேசிய முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியும் மலேசியக் குழுவில் இணைந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles