101 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்தில் ஆன்மிக அதிர்வுடன் மஹா சதுர்த்தி விழா!

தெலுக் இந்தான், செப். 16-

தெலுக் இந்தான் ஜாலான் சங்காட் ஜோங்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்தில் பிரமோற்சவ மஹா சதுர்த்தி விழா, சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள் மற்றும் சுவாமி வீதியுலாவுடன் பக்தி பரவசமாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் கிருஷன் மூர்த்தி சுப்பையா தலைமையில், அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், சாந்தி விசேஷ பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, மஹாபிஷேகம் மற்றும் பால் குட அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து கும்ப புறப்பாடு நடைபெற்றதுடன், ஸ்ரீ வெள்ளை விநாயகருக்கு கும்ப அபிஷேகமும் 108 சங்காபிஷேகமும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன. பின்னர் ஆலய விசேஷ ஷோடச உபசார பூஜை மற்றும் மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது.

விழாவில் திரளாகக் கலந்து கொண்ட பக்தர்களுக்காக ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.

அன்றைய தினம் மாலை நேரத்தில் ஸ்ரீ மஹா வெள்ளை விநாயகர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சர்வ திவ்ய அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் சுவாமிக்கு ஆலய பவனியும் பரிவேட்டை திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதன் சிறப்பம்சமாக, ஸ்ரீ மஹா வெள்ளை விநாயகர் சுவாமி தங்க மூஷிக வாகனத்தில் வீர கணபதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார். அதேவேளை, உற்சவர் மூர்த்தியான ஸ்ரீ மஹா வெள்ளை விநாயகர் சுவாமி சித்தி–புத்தி கணபதி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களை அருளால் ஆசீர்வதித்தார்.

பாரம்பரியமும் பக்தியும் ஒன்றிணைந்த இவ்விழா சிறப்பாக நடைபெற பல்வேறு வகைகளில் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலயத் தலைவர் கிருஷன் மூர்த்தி சுப்பையா தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles